பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பீகார் முதல்வர் பதவியை நேற்று நிதிஷ்குமார் திடீரென்று ராஜினாமா செய்தார்.
மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.
நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாஜக ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது:-
நிதிஷ்குமார் தலைமையில் அமையும் புதிய அரசில் பாஜக இடம்பெறும் என்றார்.
அதன்பிறகு இரவில் நிதிஷ்குமாரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரின் அழைப்பை ஏற்று பீகாரின் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்கிறார். அவரது மந்திரிசபையில் பாஜகவும் இடம்பெறுகிறது.
முதல் நாளில் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் மறுநாளே மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது.