`அக்னிபாத்` திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள் - மத்திய அரசு நெருப்புடன் விளையாடுவதாக ப.சி விமர்சனம்!
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு நெருப்புடன் விளையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ராணுவத்திற்கு தற்காலிகமாக ஆள்சேர்க்கும் 'அக்னிபாத்' என்ற திட்டத்தை கடந்த செவ்வாய்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் 46 ஆயிரம் வீரர்களை தற்காலிகமாக ராணுவத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.5 வயது முதல் 21 வயதான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.
இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.4.76 லட்சம் சம்பளமும் கடைசி மற்றும் 4-ம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும். மேலும், இதில் 25% வீரர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் திறமையை பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதம் உள்ள 75% வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தால் தங்களது வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதால் இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வட மாநில இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பீகாரில் ரயில்கள் மற்றும் பாஜக அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு நெருப்புடன் விளையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். முப்படைகளுக்கும் 46,000 ஆயிரம் வீரர்களை தற்காலிகமாக நியமிக்கும் மத்திய அரசின் திட்டம் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் அக்னிபாத் என்ற 4 ஆண்டு கால ராணுவ பணி திட்டம் ஒன்றிய அரசால் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான இளைஞர்களுக்கு ராணுவ பணி வாய்ப்பை மறுப்பதாக அக்னிபாத் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்தில் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு முழுமையான ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்பது உத்தரவாதம் இல்லை எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
அக்னிபாத் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்தி விளைவுகளை பார்த்த பின்பே அறிவித்து இருக்க வேண்டும் எனவும், இந்த திட்டம் சர்ச்சைக்குரியது என்பதோடு பல ஆபத்துகளையும் உள்ளடக்கி உள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR