புதுடெல்லி: கை ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார்.


இந்நிலையில் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இனி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் பிரமாண பத்திரம் கொடுத்துத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும்.


நாட்டில் ரொக்கமில்லா பண பறிமாற்றத்தை, அதாவது மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘டிகிதன்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மின்னணு பண பரிமாற்றத்துக்கான ‘பீம்’ (பாரத் இன்டர்பேஸ் பார் மணி) என்ற புதிய செயலியை தொடங்கிவைத்தார். செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு, அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக ‘பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


வியாபாரிகள் ரொக்கமில்லா ஆதார் வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அந்த ஸ்மார்ட் போனை கை ரேகை பதிவு கருவியுடன் இணைக்கவேண்டும். வாடிக்கையாளர் தனது ஆதார் அடையாள அட்டை எண்ணை இந்த செயலியுடன் இணைப்பதோடு, எந்த வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.


இந்த முறையில் பொருட்கள் வாங்கி வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளரின் கை ரேகைதான் பாஸ்வேர்டு ஆக பயன்படும். மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி ‘பீம் செயலி’ உதவியுடன் பொருட்களை வாங்குவோர் அதற்கான சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை.


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–


நாட்டில் ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் நுகர்வோருக்கான லக்கி கிரகாக் யோஜனா (அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்), சிறு வணிகர்களுக்கான டிகிதன் வியாபார் யோஜனா (டிகி பணவர்த்தக திட்டம்) என்ற இரு பரிசு திட்டங்களை நான் அறிவித்தேன். நாட்டில் விரைவில் அனைத்து பணபரிமாற்றங்களும் ‘பீம் செயலி’யின் மூலமே நடைபெறும். இந்த பீம் செல்போன் செயலி தலித்துகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் வழங்குவதாக அமையும்.


வாடிக்கையாளரின் கை ரேகை மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவதால் இது மிகவும் பாதுகாப்பான பண பரிமாற்ற முறை ஆகும். இது படிக்காத பாமர மக்களுக்கும் வசதியான பரிமாற்ற முறை. மக்களின் கை பெருவிரல் ரேகையே இனி அவர்களுடைய வங்கியாகவும், அடையாளமாகவும், வணிகமாகவும் செயல்படப் போகிறது. இந்த முறையில் பண பரிமாற்றம் செய்யும் முறை நாடு முழுவதும் இன்றும் 2 வாரங்களில் தொடங்க இருக்கிறது.


இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


இந்த நிகழ்ச்சியில், மின்னணு பண பரிமாற்ற பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி பரிசுத்தொகை வழங்கினார்.