PM Modi 3.0 Cabinet Ministry: நடந்து முடிந்த 18ஆவது மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 293 தொகுதிகளிலும், காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிடவை அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு தேர்தல்களிலும் முறையே 44 மற்றும் 52 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், தற்போது 99 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்கு பின் ஒரு சுயேச்சை எம்பியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதன் மூலம், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், பாஜகவுக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மூன்றாவது முறையாக அமைய உள்ளது. நேற்று நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அந்த வகையில், நரேந்திர மோடி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்க உள்ளார்.


பதவியேற்பில் பங்கேற்கும் தலைவர்கள் யார் யார்?


பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை குடியரசு தலைவர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு குடியரசு தலைவர் மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணை குடியரசு தலைவர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கூட்டணி கட்சி தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான், அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச பிரபலங்களும் இன்றைய பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.


மேலும் படிக்க | தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!


பிரதமர் மோடி 3.0


இன்று பிரதமருடன் 30 மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். இன்றைய விழா இரவு 7.15 மணிக்கு தொடங்கி 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி காலத்தில் (PM Modi 3.0) அமைச்சரவையில் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 78 முதல் 81 ஆக இருக்க வாய்ப்புள்ளது. 


அண்ணாமலைக்கு வாய்ப்பா?


அதில் இன்று முக்கிய துறையின் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. நிதி, பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை ஆகிய துறைகளின் மத்திய அமைச்சர்கள் இன்று பதவியேற்கலாம். இவை அனைத்தும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 


அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது முக்கிய கட்சிகளாக விளங்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெற்றுவிடும் எனலாம். அதிலும் குறிப்பாக, தெலுங்கு தேசம் ஒரு முக்கிய மக்களவை உறுப்பினரும், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பிடிக்க உள்ளார்.


யார் இந்த சந்திரசேகர் பெம்மாசானி?


2024 மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் மிகவும் பணக்காரரான சந்திரசேகர் பெம்மாசானி என்பவர் பிரதமர் மோடியின் இந்த அமைச்சரவையில் இணைய அமைச்சராக பதவியேற்க இருப்பது உறுதியாகி உள்ளது. . சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் ஆந்திரா மாநிலம் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் கிலரி வெங்கட ரோசைய்யாவை சுமார் 3.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 



சந்திரசேகர் பெம்மாசானியின் நிகர சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஆகும். அதாவது தற்போது வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களிலேயே சந்திரசேகர்தான் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். சந்திரசேகர் பெம்மாசானி இன்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய் கல்லா தனது X பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று இரவு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள விழாவில் பதவிப் பிராமணம் செய்துகொள்வார் எனவும் தெரிகிறது. 


48 வயதான சந்திரசேகர் பெம்மானி UWorld எனப்படும் ஆன்லைன் கற்றல் தளத்தில் சிஇஓவாக உள்ளார். மேலும், இவர் ஹைதராபாத்திலும், அமெரிக்காவிலும் மருத்துவம் படித்தவர். அந்த வகையில், தெலுங்கு தேச கட்சியின் அயலக அணியின் முக்கிய தலைவராகவும் இருந்தார். அமெரிக்காவில் அக்கட்சியின் கூட்டங்கள் நடந்த போது அதனை ஒருங்கிணைத்தவர் இவர்.


இளம் மத்திய அமைச்சர்...


இவருடைய பெம்மசானி அமைப்பு குண்டூர் மற்றும் நரசராவ்பேட்டை மாவட்டங்களை சுற்றிய கிராமங்களில் பல மருத்துவ முகாம்களை அமைத்து மருத்து சேவை அளித்து வருகிறது. தொடர்ந்து அந்த அமைப்பு அந்த பகுதியின் கிராமங்களுக்கு குடிநீர் வசதியையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. எனவே, மத்திய இணையமைச்சராக இவர் மருத்துவம் துறை சார்ந்து பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் இவருடன் தெலுங்கு தேசம் கட்சியின் மற்றொரு மக்களவை உறுப்பினரான ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு என்பவரும் மோடியின் அமைச்சரவையில் இன்று பொறுப்பேற்க உள்ளார். இவர்தான் இந்திய வரலாற்றில் இளம் வயதிலேயே மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கும் பெருமையை பெற்றுள்ளார். இவரின் வயது 36 ஆகும். இவர் ஆந்திராவின் ஸ்ரீகாக்குளம் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினர் ஆனார். 


மேலும் படிக்க | இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ