ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. 


இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராகவும் புதிய முதல் மந்திரியாகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.


இதையடுத்து,இன்று காலை ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருமான, ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார்.


இந்த பதவியேற்பு விழாவில் இன்று பங்கேற்க பிரதமர் மோடி தற்போது, ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவிற்கு வருகை புரிந்துள்ளார். அவரை தொடர்ந்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும்,குஜராத் மாநில சட்டசடை தோ்தலில் பா.ஜ.க. அரசு 99 தொகுதிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது.


இதை தொடர்ந்து,குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், குஜராத்தில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றனர். என்பது குறிபிடத்தக்கது.