Bharat Jodo Nyay Yatra: `சிறிய மாநிலமாக இருந்தாலும்` நாகாலாந்து மக்கள் குறித்து ராகுல்
Rahul Gandhi In Nagaland: `சிறிய மாநிலத்திலிருந்து` வந்தாலும் நாகாலாந்து மக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு இணையாக உணர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Congress Bharat Jodo Nyay Yatra: பாரத் ஜோடோ நீதி யாத்திரை பயணத்தின் மூன்றாம் நாள் நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவின் மையப்பகுதியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "மக்களுக்கு நீதி வழங்குவது, அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவது, அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில், சமமான கட்டமைப்பை ஏற்படுத்துவது தான் இந்த யாத்திரையின் முக்கியமான பணியாகும் எனக் கூறினார்.
நாகாலாந்து மாநிலத்தில் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது பேசிய அவர், “நாகாலாந்து சிறிய மாநிலமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமாக உணர வேண்டும். அதுதான் 'பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் நோக்கமாகும். மக்களுக்கு நீதி வழங்குதல், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை மிகவும் சமமாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
கடந்த ஆண்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டோம். இது இந்திய மக்களை ஒன்றிணைக்க உதவியது. இது அரசியல் களத்தை மாற்றியது. பாஜகவின் பிளவுபடுத்தும் கதைக்கு மாற்றாக அமைந்தது. இந்த முறை, சோகமான நிகழ்வுகள், உயிர் இழப்பு மற்றும் வன்முறை காரணமாக மணிப்பூரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த மாநிலத்திற்கு பிரதமர் வருகை தராதது வருத்தமளிக்கிறது. இது வேதனையான மற்றும் அவமானகரமான விவகாரம்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணிக்கும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்க வேண்டும் என்று மக்கள் கூறினர். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நோக்கம் "சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி" அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் இருந்து ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யைத் தொடங்கிய ராகுல் காந்தி, நேற்று (ஜனவரி 15, திங்கள்கிழமை) மாலை நாகாலாந்து சென்றடைந்தார்.
அனைத்து அன்பிற்கும் நன்றி -ராகுல் காந்தி
மணிப்பூர் பயணத்தில் பேசிய ராகுல் காந்தி, "மணிப்பூர் முழு நாட்டையும் நம்பிக்கையான கண்களுடன் பார்க்கிறது. அவர்களின் கண்களில் இருந்து வலியை துடைத்து, 'நம்பிக்கை விளக்கை' ஏற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பிரிவினை மற்றும் புறக்கணிப்பு அரசியலால் காயப்பட்ட இந்தியாவின் ஆன்மாவின் மீது ஒற்றுமை மற்றும் அன்பின் மருந்து தான் எங்கள் பயணம். நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை, ஒன்றாக நடப்போம், ஒன்றாக போராடுவோம்" என்றார்.
அதேபோல நேற்று உயர்நிலைப் பள்ளியில் (மணிப்பூர்) நடைபெற்ற மற்றொரு பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகளை ஒன்றிணைக்கும் நோக்கமாக கடந்த ஆண்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டோம். இதன் மூலம் இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நாங்கள் கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு யாத்திரை செய்ய விரும்பினோம். மணிப்பூர் மக்கள் என்னவிதமான துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் உணரும் வகையில், மணிப்பூரில் இருந்து பயணத்தை துவங்குவதே மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.
மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம். மணிப்பூரில் இருந்து தொடங்கி இப்போது நாகாலாந்தை கடக்கிறோம். இது ஒரு அழகான அனுபவம். அனைத்து அன்பிற்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்றார்.
"மொஹபத் கி துகான்" சிறப்பு பேருந்து
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த பயணம் 15 மாநிலங்களில் 6700 கி.மீ.க்கு அதிகமான தூரம் பயணித்து மும்பை சென்றடையும். அதன் ஒரு பகுதியாக வயநாடு எம்.பி ராகுல் காந்தி "மொஹபத் கி துகான்" (அன்புக்கான கடை) எனப் பெயரிப்பட்ட சிறப்பு பேருந்தில் பயணம் செய்து வருகிறார். அந்த சிறப்பு பேருந்தில் ஏறி ராகுல் காந்தியைச் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய நீதி பயணம்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் (Bharat Jodo Yatra) இரண்டாம் கட்ட பயணமான "இந்திய நீதி பயணம்" (Bharat Nyay Yatra) ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடங்கியது. மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது. 2024 லோக்சபா தேர்தலைக் குறி வைத்து இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் இந்த நீதி பயணம் 15 மாநிலங்களில் 6700 கி.மீ. மற்றும் 67 நாட்கள் பயணிக்க உள்ளது.
இந்திய நீதி பயணம் மணிப்பூரில் தொடங்கி, நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாகச் சென்று மகாராஷ்டிராவில் முடிவடையும். இந்த நீதி பயணத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய ஒற்றுமை பயணம்
கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 30 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாரத் ஜோடோ யாத்திரை பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடந்தது. சுமார் 3570 கிலோமீட்டர் என 145 நாள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ