Netaji Subhas Chandra Bose Jayanti: "வீரம் விளைந்த தமிழ் மண்ணை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். இருகரம் கூப்பி இம்மண்ணை முத்தமிட்டு தலை வணங்குகிறேன். ஏனெனில், தமிழர்களின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன் ; வியப்படைகிறேன்.  இனியொரு பிறவி உண்டெனில், தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன்" என 1939ஆம் ஆண்டில் மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கம் முன்னின்று நடத்திய பொதுக் கூட்டத்தில் வீரமுழக்கமிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வீரமுழக்கத்தில் ஆங்கிலேயர்களை இறுதி மூச்சுவரை எதிர்த்துநின்ற வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் போன்ற வீரமிக்க மாவீரர்களை எடுத்துரைக்க அவர் தவறவில்லை. அந்தளவிற்கு இந்திய விடுதலைக்காக தமிழர்களின் பங்களிப்பானது அளவிற்கரியது ; அளப்பரியதாகும். 


1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் இவ்வுலகுக்கு புதிய வரவாக மேற்குவங்கம் கட்டாக்கில் அவர் தோன்றினார். நேதாஜி இவ்வுலகுக்கு அறிமுகமாகி 126 ஆண்டுகள் ஆகிறது. அவரது இறப்பு இன்றுவரை உறுதிசெய்யப்படாததால், மரணத்தை வென்ற மாவீரரான சுபாஷ் சந்திரபோஸை இந்நாளில் நினைவுகூர்வது என்பது மிகவும் பொருத்தமாகும். 


மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பை காண ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி


அடங்க மறுத்த நேதாஜி


நேதாஜியின் முன்னோர்கள் 27 தலைமுறைகளாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள் என்ற பாரம்பரிய மிக்க பெருமை அவரது குடும்பத்துக்கு உண்டு. பள்ளி கல்வியை உள்ளூரில் கற்ற அவர், உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றறிந்தார்.


நாடு விடுதலையடைவதற்குமுன், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐஏஎஸ் தேர்வானது, ஐசிஎஸ் தேர்வாக நடத்தப்பட்டது. அத்தேர்வை எதிர்கொண்ட போஸ், இந்திய அளவில் நான்காவது இடத்தினை தக்கவைத்தார். 
இந்நிலையில், ஆங்கிலேயரின் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் அடிமையாக இருந்து பணிசெய்ய விரும்பாத நேதாஜி, அவருக்குக் கிடைத்த உயர் பதவியான இந்திய குடிமை பணியை ஏற்க மறுத்துவிட்டார்.
 
குடும்ப உறவுகளும் நண்பர்களும் ஐசிஎஸ் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தியபோது, அடியேன் பிறந்த தாய்நாட்டிலே ஆங்கிலேயனுக்கு அடிபணிந்து வேலை செய்வதா? பதவியைவிட மானமும் மரியாதையும்தான் முக்கியம் என்ற அவர், ஐசிஎஸ் பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்து விட்டார்.


ஆகமொத்தத்தில், நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவே இருக்க விரும்பினார் நேதாஜி. அதன் பொருட்டு, இளைஞனாக இருந்த அவர்,  அன்றைய காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்டார்.  ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டம் பலவும் கண்டார் ; அதற்காக ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்டார். ஆறுமாத காலத்துக்கு அளித்த சிறைதண்டனையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார்.


ஐஎன்ஏவில் 600 தமிழர்கள்


'பார்வர்ட்' எனும் ஆங்கில் இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சுபாஷ், அவ்விதழில் ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்துவத்துக்கு எதிராகவும் நாட்டின் விடுதலையுணர்வை தூண்டும் வகையிலும்  பல்வேறு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலம் இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தார். காலப்போக்கில் கொள்கை முரண்பாட்டால் காங்கிரசில் இருந்து விலகிய அவர், 'அகில இந்திய பார்வர்ட் 'என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதன் தலைவர் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார்.


நாட்டு விடுதலைக்காகவும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் 1942ஆம் ஆண்டு 'இந்தியத் தேசிய இராணுவம்' எனும் படையை சுபாஷ் தொடங்கினார்.  அப்படையை வலிமையாக்கும் பொருட்டு, வீரமிக்க தமிழர்களின் உதவியை நாடினார். அதற்கேற்ப 600 தமிழர்கள் ஆர்வத்துடன் அவரது படையில் ஐக்கியமாகினர். இது தவிர, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களும் தன்னார்வலப் படைவீரர்களும் இன்முகத்துடன் தங்களை இதில் இணைத்துக் கொண்டனர்.


ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் ; அவற்றை நிலைநிறுத்தும் பொருட்டும் இந்திய தேசிய இராணுவத்தில்  பெண்களுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.  அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் வீரமங்கையான 'ஜான்சி ராணி' பெயரில் படையொன்றை உருவாக்கினார், நேதாஜி. 


அதில் 1500பேர் அங்கம் வகித்தனர். அப்படைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி சேகல் என்பவரை தலைவராக்கினார். அதன் பொருட்டு லட்சுமி சேகலை கேப்டனாகக் கொண்ட ஜான்சிராணி படையின் பங்களிப்பானது ; நாட்டின்  விடுதலைப் போராட்டத்துக்கு பேருதவியாக அமைந்தது.


நேதாஜியின் மரணம்


இந்திய தேசிய இராணுவத்தின் தலைவரும் ; விடுதலைப் போராட்ட வீரருமான நேதாஜி, தைவான் விமான விபத்தில் மரணித்ததாக தகவல் வெளியானது. ஆனபோதிலும், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் நடைபெற்ற விமான விபத்தில் அவர் மரணிக்கவில்லை என்று பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜே.பி.பி மோரே தனது ஆய்வு புலத்தின் வாயிலாக அவற்றை ஆதாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளார்.


பிறப்பு - இறப்பு இரண்டையும் சந்திக்கும் மனித வாழ்க்கையில், போஸின் மரணம் இன்றுவரை உறுதிபடுத்தப்படாததால், இந்திய மக்களின் மனதில் மரணத்தை வென்ற மாவீரராகவே இன்றளவும் விளங்குகிறார் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!


மேலும் படிக்க | Budget 2023: டாப் 5 எதிர்பார்ப்புகள், நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ