திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகம் மீது தாக்கு
சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் சிபிஐ கைது செய்தது. இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் எம்பி தபஸ் பால் சமீபத்தில் சிபிஐ கைது செய்தது.
இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தை நூற்றுக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் முற்றுகையிட்டனர். அவர்கள், பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிலர் அலுவலகம் மீது கல்வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் கூட்டத்தை கலைத்தனர். தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருக்கிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.