வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். 


கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். மூத்த அதிகாரிகள் குறித்தும், அவர்கள் எல்லை பாதுகாப்பு வீரர்களை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார் கூறினார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தேஜ் பகதூரின் வீடியோக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லை பாதுகாப்பு படை மறுத்திருந்தது. இதனையடுத்து தேஜ் பகதூர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.


இந்நிலையில் தேஜ் பகதூர், வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்திரபிரதேசம் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பல அரசியல் கட்சிகள் என்னை அணுகின. இருந்தும் நான் சுயேட்சையாகவே போட்டியிட உள்ளேன். ராணுவ வீரர்கள் விஷயத்தில் அரசு தோல்வியடைந்து விட்டது. ராணுவ வீரர்களின் பெயரை சொல்லி பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார். ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்காது. வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ என் நோக்கம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.