புதுடில்லி: உன்னாவ் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விசாரணையில், உன்னாவ் கற்பழிப்பு வழக்கு தொடர்பான ஐந்து வழக்குகளையும் டெல்லியில் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தினமும் இந்த வழக்கு சம்பந்தமாக சிறப்பு நீதிபதி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார். இந்த வழக்கின் விசாரணை 45 நாட்களில் நிறைவடையும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உன்னாவ் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது வழக்கு சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளும் 12 மணிக்குள் நீதிமன்றம் வரவேண்டும் என உத்தரவிட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மற்றும் விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் ஆகியோரை விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியுமா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி மருத்துவரிடம் ஆலோசித்து பதிலளிக்குமாறு கூறி வழக்கை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார். 


மீண்டும் வழக்கு மதியம் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது. லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ மருத்துவமனை மூலம் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்ல முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் விரும்பினால், பாதிக்கப்பட்டவரை விமானத்தில் கொண்டு செல்லலாம் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் விரும்பினால், அவர்களை விமானம் மூலம் கொண்டுவந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


சாலை விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.