மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா ? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வரும் 12-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் வழங்கியது.
இதனிடையே நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சட்டப்பேரவை செயலருக்குக் கடிதம் எழுதினார். இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சிவசேனா தரப்பில் காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வியும், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுலும் ஆஜராகினர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவே முடியாது எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வாக்களிக்க முடியும் அல்லது முடியாது என்பதே தற்பொழுது கேள்வியாக இருப்பதாகவும் சிவசேனா தரப்பில் வாதிடப்பட்டது.
நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கியதாகவும் சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
55 எம்எல்ஏகளில் 39 பேர் தங்களது தரப்புக்கு ஆதரவாக இருப்பதால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயங்குவதாகவும், தாங்கள் சிவசேனா கட்சியை விட்டு போகவில்லை - இன்னும் சொல்லப்போனால் நாங்கள்தான் சிவசேனா கட்சி - தங்களிடம் தான் பெரும்பான்மை பலம் உள்ளதென ஏக்நாத் ஷிண்டே தரப்பில் வாதிடப்பட்டது.
இதனிடையே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கெடுப்பதற்காக அசாமில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி விமானம் மூலம் கோவாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR