பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது, கண்காணிப்பு வளையத்தில் டெல்லியின் எல்லைகள்
டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டதால் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகள் எனப்படும் Delhi NCR பகுதிகளில் உயர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லி-நொய்டா எல்லையில் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில், கெளதம் புத் நகர் போலீசார் புதன்கிழமையன்று உயர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு, டெல்லி-நொய்டா எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சராய் காலே கான் (Sarai Kale Khan) அருகே ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed (JeM))செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்தது.
இது குறித்து தகவல் அளித்த நொய்டா கூடுதல் போலீஸ் கமிஷனர் ரன்விஜய் சிங், நிலைமையை கருத்தில் கொண்டு எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர கண்காணிப்பும், சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
அருகிலுள்ள இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறித்து பத்திரிகைகள் மூலமாகவும், அரசு ரீதியில் துறைகளின் சார்பிலும் தகவல்கள் கிடைப்பதன் அடிப்படையில் பாதுகாப்பை அதிகரிக்கப்பதாக சிங் கூறினார்.
வழக்கமாக மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புகள் நடைபெறும். இருந்தாலும் கூட, அண்டை மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில், இதுபோன்ற எச்சரிக்கைகள் விடப்படும். அதிலும் டெல்லி தலைநகரம் என்பதால் அங்கு பயங்கரவாதிகள் என சந்தேகப்படுபவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுவதும் அவசியமாகிறது.
தீவிரவாதிகள் டெல்லிக்கு செல்லாமல், ஆனால் அங்கு ஏதாவது விஷம முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டால், நொய்டாவில் தங்குமிடம் தேட முயற்சிக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் நொய்டா உள்ளிட்ட என்.சி.ஆர் எனப்படும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழிப்புணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR