மத்திய அமைச்சர்கள் இன்று ராஜினாமா: சந்திரபாபு நாயுடு!
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சி மத்திய அமைச்சர்கள் 2 பேரும் இன்று ராஜினாமா செய்வுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் முடிவில் எந்த சமரசமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட தங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2 இரண்டு பேரும் இன்று பதவி விலகுவார்கள் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் கோரிக்கைகள் குறித்து பிரதமரை தொடர்பு கொள்ள முயன்று முடியவில்லை என்றும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு குறை கூறியுள்ளார்.
அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசக் கட்சி விலகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இது தொடர்பாக தகவல் அளித்து தெலுங்கு தேசக் கட்சி மூத்தத் தலைவர் ஒருவர், எங்கள் கட்சியின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் அறிவியல், தொழில்நுட்ப, மண்ணியல் துறை அமைச்சர் சத்ய நாராயண சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்யவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.