பறவையின் மீது ஏறி பறந்து வந்தாரா சாவர்க்கர்? கர்நாடக பாடநூலால் எழுந்த சர்ச்சை
Savarkar : இந்துத்துவவாதியான சாவர்க்கர் குறித்த விவாதங்கள் கர்நாடகாவில் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக பா.ஜ.க தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் வரலாற்றை மாற்ற நினைப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஷிவமோகாவில் அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசல் அருகில், சாவர்க்கரின் பதாகைகளை வைக்க முயன்றபோது எழுந்த மோதலில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை தடியடி நடத்தியதோடு, அப்பகுதியில் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் கடந்த 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையை மைசூருவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சாவர்க்கரை முன்னிலைப்படுத்தும் அடுத்த முயற்சியாக, கர்நாடகாவில் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘காலத்தை வென்றவர்கள்’ என்கிற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய முடியாத இடத்தில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், தினந்தோறும் பறவை மீது அமர்ந்து சிறையில் இருந்து வெளியேறி நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கர்நாடகாவில் பெரியார், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கம்
இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இதுபோன்ற கருத்துகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்களில் நிலை என்னவாகும் எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வாக்கியங்கள் உருவகத்திற்காக இடம் பெற்றுள்ளதாக பாடத்திட்டக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆனால் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது ஒரு உருவகம் போல் தோன்றவில்லை எனவும், 'வரலாற்று உண்மைகளை சிதைக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயணகுரு குறித்த பாடங்கள் கர்நாடக 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது. எப்படி இருந்தாலும், கர்நாடகாவுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாவர்க்கர் குறித்த விவாதங்கள் அதில் முக்கியப் பங்காற்றும் என கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சிபிஎஸ்இ-யில் நீக்கப்பட்ட பாடங்கள்..ராகுல்காந்தி கண்டனம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ