UPSC தலைவர் திடீர் ராஜினாமா... பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா...?
UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
UPSC Chairman Manoj Soni Resignation: இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி (Manoj Soni) இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவரின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்தாண்டு காலம் இருக்கும் சூழலில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனோஜ் சோனி அவரின் ராஜினாமா கடிதத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அளித்துவிட்டதாகவும், இன்னும் உயர் அதிகாரிகள் அவரின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது பொதுத்தளத்தில் சர்ச்சையை கிளப்பிய பெண் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் (Puja Khedkar) விவகாரத்திற்கும், இவரின் ராஜினாமாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
ராஜினாமாவுக்கு பின்...
மனோஜ் சோனி கடந்த 2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இந்திய குடிமைப் பணி ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் பதவிக்காலம் வரும் 2029ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த நிலையில், பதவிக்காலம் நிறைவடையும் ஐந்தாண்டுகளுக்கு முன்னரே ராஜினாமாவை அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மேலும் படிக்க | உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாசத்துக்கு 4 கோடி ரூபாய் EB பில்...! ஷாக்கான ஓனர்
குடிமைப் பணி ஆணையத்தின் தலைவராக இருந்தாலும் அவர் அந்த பதவியை ஏற்க விரும்பவில்லை என்றும் அதில் இருந்து விடுபடவே அவர் விரும்புகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயர் அதிகாரிகள் இன்னும் அவரின் ராஜினாமைவை ஏற்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனோஜ் சோனி இனி தனது நேரத்தை சமூக-பக்தி சார்ந்த நடவடிக்கைகளில் அதிகம் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் துணை வேந்தர்
இவர் இந்திய குடிமைப் பணி ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு முன், பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக பொறுப்பு வகித்திருக்கிறார். குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (MSU) துணை வேந்தராக நியமிக்கப்பட்டபோது, இந்தியாவிலேயே மிக இளம் வயதில் துணை வேந்தரானாவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர் அந்த பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008 ஆண்டு ஏப்ரல் வரை துணை வேந்தராக இருந்தார்.
யார் அந்த பூஜா கேட்கர்?
மனோஜ் சோனி ராஜினாமா விவகாரத்திற்கு முன்னதாக, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புனேவில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் மாற்றுத்திறனாளி என அவர் போலியாக ஆவணங்களை சமர்பித்து, குடிமைப் பணித் தேர்வுக்கு பலமுறை எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்ததை அடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது. மேலும், பயிற்சி முடியும் முன்னரே தனது அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளை பயன்படுத்தி புனேவில் இருந்து இடமாற்றம் பெற்றதை அடுத்து இவர் குறித்த மோசடி குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இவர் குறித்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து குடிமைப் பணி ஆணையத்தின் மீதும் பல புகார்கள் சமூக வலைதளங்களில் எழுந்ததை பார்க்க முடிந்தது. போலி ஆவணங்கள், சான்றிதழ்களை சமர்பித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளை பெறுவது கண்டிக்கத்தக்கது எனவும், விரைந்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ