பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவி - ஏன்?

National News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 19, 2024, 02:22 PM IST
  • உத்தர பிரதேசத்தில் பாஜக எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது.
  • முதல்வர் யோகியின் மீது துணை முதல்வர் கேசவ் பிரசாத் சாடியதாக கூறப்பட்டது.
  • இதை அடுத்து ஜே.பி. நட்டாவுடன் டெல்லியில் சந்திப்பும் நடைபெற்றது.
பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவி - ஏன்? title=

Todays National News In Tamil: 18ஆவது மக்களவை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்து ஒரு மாதம் காலம் தாண்டிவிட்டது. இருந்தாலும் இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது இன்னும் பல மாநிலங்களின் அரசியல் களத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பின்னடைவு என்பது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். 

கடந்த 2019இல் 303 இடங்களை பெற்ற பாஜக இம்முறை 240 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் பின்னடைவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கடந்த முறை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களை பிடித்த பாஜக இம்முறை 33 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 

கூட்டணிக்குள்ளும் பிரச்சனை

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் இத்தகைய தோல்வியை பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணி இங்கு சிறப்பாக செயல்பட்டு 43 தொகுதிகளை கைப்பற்றியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தும் தேர்தலில் பாஜக மீதான அதிருப்தியை வாக்காளர்கள் பிரதிபலித்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் படிக்க |  உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?

உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணியின் இந்த பின்னடைவை தொடர்ந்து, பாஜகவிலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சரி சிறு பிளவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்தர பிரதேசத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள சஞ்சய் நிஷாத் தலைமையிலான நிஷாத் கட்சி மற்றும் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் (சோனேலால்) ஆகியவை ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கட்சிகளுடன் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு (Yogi Adityanath) சரியான போக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மாநில துணை முதல்வரான கேசவ் பிரசாத் மௌரியாவுடனும் யோகிக்கு மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

கட்சியை விட யாரும் பெரிதில்லை

சமீப காலமாக, அமைச்சரவை கூட்டங்களை கேசவ் பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) தவிர்த்து வருவதாகவும், அதுமட்டுமின்றி லக்னோவில் சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச பாஜக செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை கேசவ் பிரசாத் கடுமையாக சாடியதாகவும் தகவல்கள் வெளியாகின. யோகி ஆதித்யநாத் அதீத நம்பிக்கையில் திழைப்பதாகவும், தனித்து செயலாற்றுவதாகவும் பேச்சுக்கள் எழுந்த நிலையில், முதல்வர் குறித்து கேசவ் பிரசாத் பகீரங்க கருத்துகளை தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

"அரசை விட அமைப்புதான் பெரிது. யாரும் அமைப்பை விட பெரியவர்கள் இல்லை" என கேசவ் பிரசாத் சீற்றம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் அனுசரித்து போகவில்லை என்பதும், கூட்டணி கட்சிகள் சார்ந்த சமூகங்களை புறக்கணித்ததுமே முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்தே, யோகி ஆதித்யநாத் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

கேசவ் பிரசாத்திற்கு முக்கிய பொறுப்பு?

உத்தர பிரதேசத்தில் இந்த சலசலப்புகள் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், நேற்று முன்தினம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கேவச் பிரசாத் மற்றும் உத்தர பிரதேச பாஜக மாநில தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் கட்சி ரீதியாகவும், கூட்டணி ரீதியாகவும் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டலாம் என கூறப்படுகிறது. 

அந்த வகையில், கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை பாஜக தலைமை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேசத்தில் கேசவ் பிரசாத் மௌரியா ஓபிசி சமூகத்தாரின் முகமாக திகழும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதீத ஆதரவுடன் இருக்கிறார். எனவே, உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் பொறுப்பை பூபேந்திர சிங் சௌத்ரியிடம் இருந்து, கேசவ் பிரசாத் மொரியாவிடம் கொடுக்க பாஜக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் இது உறுதியாகவில்லை. 

2027ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கும் திட்டம் ஏதும் பாஜகவிடம் இல்லை என்பது மட்டும் இப்போது உறுதியாகிறது. உத்தர பிரதேசத்தில் இழந்த செல்வாக்கையும், மக்கள் தொகையில் அதிகமாக இருக்கும் ஓபிசி சமூகங்களையும் கவர பாஜக அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு திட்டமிட்டிருக்கிறது எனலாம். 

மேலும் படிக்க | டிகிரி முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.10000 உதவித்தொகை! மாநில அரசு அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News