வெங்காயத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்? மத்திய உணவு அமைச்சர் தகவல்
வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து வருவது குறித்தும், அதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.
புது டெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து வருவது குறித்தும், அதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியது,
நாடு முழுவதும் சந்தையில் அதிகரித்த வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த முறை பருவமழையில் ஒரு மாதம் தாமதமாக இருந்ததால், வெங்காய விதைப்பதும் தாமதமானது மற்றும் விதைப்பு கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது. இதன் காரணமாக உற்பத்தி குறைந்தது. அதனால் புதிய வெங்காயம் சந்தைக்கு வர தாமதமாகும். வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய பயிர் நிறைய பாதிப்பை சந்தித்துள்ளது, இதன் விளைவாக வெங்காய உற்பத்தி 26% குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் மத்திய உணவு அமைச்சர் கூறுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக மழையின் காரணமாக நிலவும் வெள்ள நிலைமையால், வெங்காயத்தை கொண்டு செல்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக உள்ளூர் மண்டியை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. சந்தையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும், அதிகரிக்கவும் விலை கட்டுப்பாட்டு நிதியைப் பயன்படுத்தி முதன் முறையாக 57000 டன் வெங்காயத்தை ஒரு "பஃபர் பங்கை" அரசாங்கம் உருவாக்கியது. அந்த அடிப்படையில் மலிவான விலையில் அதிக வெங்காயத்தை கேட்ட மாநிலத்திற்கு வழங்கப்பட்டது எனவும் கூறினார்.
செப்டம்பர் 29 ஆம் தேதி, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் முற்றிலுமாக தடைசெய்ததாகவும், அதே நாளில் வெங்காய சேமிப்புக்கு வரம்பு விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சேமிப்பு கிடங்கு வரம்பு இரண்டு நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்டது. இதன் கீழ் மொத்த விற்பனையாளரால் 25 டன்னுக்கு மேல் வெங்காயத்தை வைத்திருக்க முடியாது. அதேபோல சில்லறை விற்பனையாளர் 5 டன்னுக்கு மேல் வைக்க கூடாது. வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் முறைகேடாக விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் கீழ், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு, பதுக்கல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், NAFED மற்றும் NCCF மூலம் பல்வேறு இடங்களில் மற்றும் Safal, Mother Dairy மற்றும் மத்திய, மாநில அரசு கடைகள் மூலம் மலிவான வெங்காயத்தை அரசாங்கமே வழங்கி வருகிறது. வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து வெங்காய இறக்குமதியில் அரசாங்கம் பல வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெங்காய இறக்குமதி வேகமாக அதிகரித்துள்ளது. அரசாங்கமே எம்.எம்.டி.சி மூலம் இறக்குமதி செய்கிறது மற்றும் தனியார் இறக்குமதியாளர்களையும் ஊக்குவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அடுத்த ஒரு வாரத்தில் சந்தையில் கிடைக்கும். வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்க, எம்.எம்.டி.சி (MMTC) எகிப்திலிருந்து 6090 டன் மற்றும் துருக்கியில் இருந்து 11000 டன் வெங்காயத்தையும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை கிடைக்கும். துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் 4000 டன் வெங்காயம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சந்தைக்கு வரும் எனக் கூறினார்.
மறுபுறம், நாடு முழுவதும் வெங்காய விலை பெருமளவில் அதிகரித்து வருவது குறித்து மோடி அரசும் மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று மாலை உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் குழுவின் இந்த முக்கியமான கூட்டத்தில் அமித் ஷா தவிர, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. பொது மக்கள் இப்போது வெங்காயத்தின் பெயரைக் கண்டு பயப்படுகிறார்கள். கொல்கத்தாவில் சில்லறை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 160 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பிற மாநிலங்களைப் பற்றி பேசுகையில், டெல்லி-என்.சி.ஆர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா உட்பட வெங்காயம் ஒரு கிலோவிற்கு 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.