குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம்: மோடி!
குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி!!
குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி!!
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு எழுந்து, போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து அசாமியர்கள் கவலைப்பட ஏதும் இல்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அசாமியர்களின் உரிமைகளையோ அவர்களது தனிப்பட்ட அடையாளத்தையோ அழகிய கலாச்சாரத்தையோ யாரும் பறித்துவிட முடியாது என உறுதியளிப்பதாகவும் ட்விட்டர் பதிவில் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில்..... குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர,சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது . அது உங்களின் வளம் மற்றும் வளர்ச்சியை தொடர செய்யும்.
பிரிவு 6 அடிப்படையில் அசாம் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார மற்றும் நில உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாக்க நானும் மத்திய அரசும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.