IPL-2018: இனி IPL-லில் TRS முறை அறிமுகம்!
‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (TRS) முதல் முறையாக நடைமுறைக்கு வருகிறது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா மும்பையில் நேற்று செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா பேசியதாவது.....!
‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) முதல் முறையாக நடைமுறைக்கு வருகிறது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைமுறையில் இருப்பது போல் ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம்.
அந்த அப்பீல் வெற்றிகரமாக முடிந்தால் தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் கூறிய சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
அவரது விசாரணை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். அவர் விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அவரது அறிக்கை கிடைத்த பிறகு முடிவு எடுக்கப்படும். இந்த போட்டி தொடரில் பேட்டிங்கில் அதிரடியாக கலக்கி சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ வைக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தொடக்க விழாவில் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் ஒரு சேர விழா மேடையில் தோன்றமாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. தொடக்க விழா முடிந்த மறுநாளே 2 லீக் ஆட்டங்கள் இருப்பதால் சம்பந்தப்பட்ட அணிகளின் கேப்டன்கள் உடனடியாக போட்டி நடைபெறும் நகரங்களுக்கு திரும்புவது சிரமம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஏப்ரல் 6-ந் தேதியே 8 அணிகளின் கேப்டன்கள் ஒன்று கூடி விளையாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தொடக்க விழாவில் காண்பிக்கப்படும். தொடக்க விழாவில் முதல் ஆட்டத்தில் மோதும் (சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ்) இரண்டு அணிகளின் கேப்டன்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.