காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: ஜெயக்குமார் ஆவேசம்!!
காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் (இன்று) வெளியாகும் என ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தின் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காலா படத்தின் பாடல்களை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் இணையதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது...!
காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். காலா போன்ற காளான்கள் காணாமல் போய்விடும். சமுதாயத்துக்கான நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் தெரிவித்தவர் எம்ஜிஆர்.
திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் நியாயம் வந்துவிடுமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.