#TN Budget 2022: மனநலத்துறையிலும் ஒரு திராவிட மாடலை உருவாக்கலாம்: மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் யோசனை
மனநலத்துறையிலும் ஒரு தமிழ்நாட்டு மாடல், திராவிட மாடலை உருவாக்குவோம் என்று மனநல மருத்துவரும், எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். 1 மணி நேரம் 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார். மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் சில திட்டங்களை அறிவிக்கும்போது, உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவும், அதனால் தமிழ்நாட்டில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது என்றும், இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தை (NIMHANS) போல கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இந்நிலையில், நாம் யாரையும் மாடலாகக் கொள்ளத் தேவையில்லை, நாமே இதில் மற்றவர்களுக்கு மாடலாக இருப்போம். மனநலத்துறையிலும் ஒரு தமிழ்நாட்டு மாடல், திராவிட மாடலை உருவாக்குவோம் என்று மனநல மருத்துவரும், எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
''முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாநில அரசின் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைவராலும் பெரிதாக பேசப்படுகிறது. பெண் கல்வியில் இருந்து பெரியாரின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படுவது வரை பெரும்பாலான பட்ஜெட் அறிவிப்புகள் வெகுசன மக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் இந்த வருடத்து பட்ஜெட்டின் பெரும்பாலான அறிவிப்புகள் இப்படி பெரிதாக கொண்டாடப்படும் வேளையில் ‘கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் பகடியாக, கேலியாக பேசப்படுகிறது. மிக முக்கிய அரசியல் விமர்சகர்கள் கூட “இது எதிர்க்கட்சிகளுக்கான அறிவிப்பு” என்று இந்த திட்டத்தின் நோக்கத்தை வேடிக்கையாக்குகிறார்கள். உண்மையில் வருத்தமாக இருக்கிறது.
அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகளின் தீவிரத்தை நாம் இன்னும் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. மனநலப் பிரச்சினை என்பது யாருக்கோ, எப்போதோ வரக்கூடிய பிறழ்வு என்ற எண்ணமே இன்னும் நமக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு மனநல பிரச்சினையை சமீப காலங்களில் எதிர்கொண்டு வருகிறோம், அதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
15 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்களில் நடக்கக்கூடிய தற்கொலைகள் இந்தியாவில்தான் மிக அதிகம். இவர்கள் எல்லாம் யாரோ அல்ல நம் கண் முன்னே இருப்பவர்கள், நமது வீட்டில் இருப்பவர்கள், நமது நண்பர்களாக இருப்பவர்கள், நம் கூடவே வசிப்பவர்கள். ஊரடங்கு காலத்திற்கு அதிகரிக்கும் மனநல பிரச்சினைகளை உலகம் அச்சத்துடன் கவனித்து வருகிறது. ஏராளமான குழந்தைகள் இதுவரை இல்லாத வகையில் பல புதிய மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
பள்ளிகள் மூடல், அதிகரிக்கும் டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாடு, ஆன்லைன் விளையாட்டுகள் என அவர்களது மனநிலை பல்வேறு காரணங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களிடம் புதிதாக உருவாகியிருக்கக்கூடிய அதீத மனச்சோர்வும், மனப்பதட்டமும், கணவன் மனைவி உறவில் உருவாகியிருக்கக்கூடிய சிக்கல்களும், முதியவர்களின் புதிய மனநலப் பிரச்சினைகளும் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கின்றன.
பொருளாதாரச் சுமைகள், வேலையிழப்பு, உறவுச் சிக்கல்கள், எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை, அதிகரிக்கும் போட்டித் தேர்வுகள், மாணவர்களின் மனநிலைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கைகள், பொருளாதாரத் திட்டங்கள் என அத்தனையும் சேர்ந்து பொது சமூகத்தின் மனநிலையைப் பெரிதளவு பாதித்திருக்கின்றன. சமீபத்தில் அதிகரித்திருக்கும் தற்கொலைகள், போதைப் பொருள் பழக்கங்கள், விவாகரத்துகள், குற்றச் சம்பவங்கள் போன்றவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநிலையின் வெளிப்பாடே! இதற்கெல்லாம் நம்மிடம் என்ன தீர்வு இருக்கிறது? எப்போதும் போல “கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படும்” என்ற ஒற்றை அறிவிப்போடு அரசாங்கங்கள் தங்கள் கடமையை முடித்துவிடுகின்றன.
மனம் தொடர்பான அறிவியல் பூர்வமான பார்வை இன்னும் இல்லாததன் விளைவாகவே “கவுன்சிலிங்” என்பது அத்தனை பிரச்சினைக்குமான சர்வலோக தீர்வாக முன்வைக்கப்படுகிறது. நாமும் “Fancy” ஆன அந்த அறிவிப்பைக் கேட்டு பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைக்கிறோம். உண்மையில் எந்தப் பிரச்சினையும் தீரவில்லை, கவுன்சிலிங் தருகிறோம் என்று சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளைப் பார்க்கப்போய்விடுகிறோம் அவ்வளவே!
என்ன தான் தீர்வு?
மனநலம் தொடர்பாகவும், அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் இன்னும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தனி நபரின் மனநிலையில் அவரின் உயிரியல் காரணிகளுக்கும் (Biological determinents), சமூக காரணிகளுக்கும் (Socila determinants) உள்ள தொடர்பை அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும். அப்போதுதான் ஒரு சமூக இடறுகளினால் தனி நபரின் மனநலம் பாதிக்கப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். கல்வி தொடர்பான புதிய கொள்கைகள் எப்படி மாணவர்களின் மனநிலைக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவினால்தான் அரசாங்கத்திற்கு அதைப் பரிந்துரை செய்ய முடியும்.
மனநலம் தொடர்பாகவும், அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள் தொடர்பாகவும், அதன் புதிய சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் நாம் உலகத்தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை இதுவரை நாம் முன்னெடுக்கவே இல்லை.
மருத்துவத்துறையில் மனநலத்துறைதான் சமீபத்தில் பெரிதும் வளர்ச்சியடைந்து வரும் துறையாக இருக்கிறது. பல புதிய சிகிச்சை முறைகள், மரபணு சோதனைகள் என அதில் ஏராளமான ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நாம் இன்னும் யோசிக்க கூட இல்லை. இன்னமும் மனநலத்திடங்களுக்கு சரியான நிதி ஒதுக்கப்படுவதில்லை அப்படி ஒதுக்கப்படும் நிதியும் ஒன்றிய அரசின் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனங்கள் அப்படி என்ன சாதித்தன என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நேற்றைய தமிழக அரசின் அறிவிப்பின் போது கூட பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தை (NIMHANS) போல கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என நிறைய பேர் சொன்னார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நாம் ஏன் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்? அங்கு மக்களுக்குப் பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமாக என்ன நடந்திருக்கிறது?
இந்த கொரோனா காலகட்டத்தில் என்ன விதமான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன? இரண்டாம் அலை நேரத்தில் “இறப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் அது மக்களின் மன நிலையை பாதிக்கும்” என்று ஒன்றிய அரசிற்கு களங்கம் வராமல் பார்த்துக்கொள்ளும் வேலையைத் தவிர அவர்கள் கொரோனா காலகட்டத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அதனால் நாம் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை.
மாறாக ஒரு ‘State of Art’ மனநல மற்றும் நரம்பியல் மையத்தை உருவாக்குவோம், அதி நவீன மனநல சிகிச்சைகள், ஆராய்ச்சிகள், திட்டங்களை உருவாக்குவோம். மனநலம் தொடர்பான புதிய அறிவியல் கருத்துகளை உருவாக்குவோம், மனநல சேவைகளை தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களுக்கும் கொண்டு செல்வோம், நவீன அறிவியலின் பலனை கடைசி மனிதர்கள் வரை கொண்டு சேர்க்கும் புதிய திட்டங்களை, கொள்கைகளை உருவாக்குவோம். அப்படி கிடைக்கும் புரிதல்களை, சாதனைகளை, தரவுகளை சர்வதேச மருத்துவ அறிவியலுக்குப் பரிந்துரை செய்வோம். நாம் யாரையும் மாடலாகக் கொள்ளத் தேவையில்லை, நாமே இதில் மற்றவர்களுக்கு மாடலாக இருப்போம். மனநலத்துறையிலும் ஒரு தமிழ்நாட்டு மாடல், திராவிட மாடலை உருவாக்குவோம்''.
இவ்வாறு மனநல மருத்துவரும், எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR