துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு நேற்றிரவு பத்துமணியளவில் குருபகவான் இடம்பெயர்ந்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாக்கியப் பஞ்சாங்கப்படி நேற்றிரவு 10.05 மணியளவில் விருச்சிக ராசிக்கு குருபகவான் இடம்பெயர்ந்துள்ளார். இதன் காரணமாக தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜைகளும் பரிகாரங்களும் நடைபெற்று வருகின்றன.


குருபெயர்ச்சி நிகழ்ந்ததும் ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு பரிகாரப் பூஜைகளும் குருபகவானுக்கு மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.


குருபெயர்ச்சியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நமச்சிவாய திருக்கோவிலில் மகா யாகம் நடைபெற்றது. சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர் திரளாக திரண்டு தரிசனம் செய்தனர். 


இதே போன்று அருப்புக் கோட்டை, தென்காசி, அறந்தாங்கி, தஞ்சை, திண்டிவனம், வாலாஜா ஆகிய இடங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இந்த குருபெயர்ச்சியால் சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு நன்மையும் தீமையும் கலந்துக் காணப்படும் எனவும், கடகம், ரிஷபம், மீனம் ஆகிய ராசிதாரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும் எனவும் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்!