உலக மகளிர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.
மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். மேலும் பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. உலக மகளிர் தினத் கொண்டாட்டங்களுக்கு முன் உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று பின்நோக்கி சென்று பார்க்கலாம்: பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள் என உயர்தட்டு மக்களுக்காகவே இந்த உலகம் பிறந்ததாக எண்ணிய காலமது! குறிப்பாக சொல்வதென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் ஆணாதிக்கமானது அளவு கடந்த நிலையில் ஆக்கிரமித்து இருந்தது. மேலும் விடுதலைக்கு முன்னிருந்த இந்தியாவிலும் இதே நிலைதான் நீடித்தது.
அடிமைத்தனத்தில் ஆண் - பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆயினும் பெண்கள் அளவுகடந்த துயரங்களையும் வேதனைகளையும் சந்திக்க நேரிட்டது. மேலும் உதாரணமாக சொல்வதென்றால், வேலைசெய்யும் ஆண்களுக்கு ஒருநாள் கூலி ஒரு ரூபாய் என்றால் பெண்களுக்கு அதில் பாதிக்கூட கிடையாது. நாலில் ஒரு பங்காக 25காசு மட்டுமே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு பெண்ணடிமைத்தனம் பெரும்பாலான நாடுகளில் மேலோங்கி இருந்த காலகட்டமது. அதிலும் பெரும்பாலான நாடுகள் விவசாயத் தொழிலையே முதன்மையாகக் கொண்டிருந்ததால், வயல்களில் பெண்கள் நடவு பணிகளில் ஈடுபடும்போது குனிந்தே வேலை பார்க்க வேண்டும். ஓய்வுக்காக ஒருகணம் நிமிர்ந்தால்கூட முதலாளி வர்க்கத்தினரின் சவுக்கடி பெண்களின் உடல் முழுவதையும் பதம் பார்த்துவிடும். மாதவிடாய் நாட்களிலும் ஓய்வு கிடையாது.
மேலும் படிக்க | Samsung Galaxy M53 5G: பிளிப்கார்ட்டில் நம்ப முடியாத சூப்பர் தள்ளுபடி
மேலும் கர்ப்பிணி பெண் குழந்தை பிறக்கும் நாள்வரை வேலைக்கு வரவேண்டும். அவர்களுக்கென்று எவ்வித தனி சலுகைகளும் கிடையாது. குழந்தை பெற்ற தாய்மார்கள் ஓரிரு நாளில் வேலைக்கு திரும்பவேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், வேலை செய்யும் இடத்துக்கு பச்சிளம் குழந்தையை தூக்கிவரக் கூடாது. வேலை முடியும்வரை பசியால் அழும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதியும் கிடையாது. இந்நிலையில் குழந்தை பெற்ற பச்சை உடம்புகாரிக்கு பால்கட்டி மார்வலி வந்தாலோ அல்லது தாய்ப்பால் நிலத்தில் வடிந்து வீணாகிப் போனாலோ அவற்றைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அரக்ககுணம் படைத்த ஆணாதிக்கம் ஆட்கொண்டிருந்த காலமது. இந்நிலையில், பெண்ணடிமை தினத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நாளாக மலர்ந்தது உலக மகளிர் தினம்! இது வெறும் கொண்டாட்டம் அல்ல. மகளிருக்கான அடிப்படை உரிமையாகும்.
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்ற நிலைமாறி, வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்றைய காலகட்டத்தில் வானில் பறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளமாக வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் அபார வெற்றியே இந்த மகளிர் தினம் கொண்டாடுவதற்கான ஆணிவேராகும். ஆயினும், அதற்கான வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. அக்காலத்தில் பெண் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேலோங்கி இருந்த ஆணாதிக்கத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போராடி வென்றெடுத்த புரட்சிகரமான நாள்தான் உலக மகளிர் தினமாகும். உழைக்கும் அடித்தட்டு பெண்கள் பலரும் அறிந்துகொள்ளாத வகையில்தான் பல கிராமப் பெண்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் மகளிர் தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அடிமைத்தனத்தின் ஆணிவேரை வேரறுக்க முடியும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி "சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம்" என்ற கோரிக்கைகளை பிரெஞ்சு புரட்சியின்போது, பாரிஸிலுள்ள பெண்கள் போர்க் கொடியை உயர்த்தி முழக்கமிட்டனர்.
மேலும் படிக்க | வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம்! விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என்று ஆண் - பெண் சமத்துவத்தை அந்நாளிலேயே ஆணித்தரமாக வலியுறுத்தி பாடினான் முண்டாசுக் கவிஞன் பாரதி, அப்பாடல் வரிகளுக்கேற்ப ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் சமவுரிமை பெறவேண்டும் என்றும், உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பாரிஸிலுள்ள பெண்கள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று வேலை நேரத்தை குறைக்கவும், உழைப்புக்கான கூலியை உயர்த்தவும்,வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தியும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உழைக்கும் பெண்கள், ஓரணியாக திரண்டு மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அவற்றை நினைவுகூரும் வகையில் அடுத்தாண்டில் இதே நாளை "உலக மகளிர் தினமாக" அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி
1910 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்க யோசனையை முன்வைத்தார் கிளாரா ஜெட்கின். இதில் 17நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, 1911 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உலக மகளிர் சிறப்புற கொண்டாடப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் விதமாக 2011 ஆம் ஆண்டு 100 ஆவது உலக மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் உலகப் போரின்போது, அமைதியையும் ரொட்டியையும் வலியுறுத்தி ரஷ்ய பெண்கள் மார்ச் 8 ஆம் தேதியன்று போராட்டத்தைத் தொடங்கினர். அந்த நாளையே 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளன்று உலக மகளிர் தினமாக அங்கீகரிக்க தொடங்கினர். இவ்வாறு உலக மகளிர் தினத்துக்கு பல்வேறு வரலாறு உண்டு. ஆயினும், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.
மேலும், ஆண்டுதோறும் ஐ.நா. உலக மகளிர் தினத்தன்று ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது. அதன்படி ஐ.நா.வின் முறையான அறிவிப்புக்குப்பின் வந்த முதல் உலக மகளிர் தினத்தின் முழக்கம், "சமத்துவத்தை யோசி, அறிவுப்பூர்வமாக கட்டியெழுப்ப, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும். வானியல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, அரசியல், ஜோதிடம், விஞ்ஞானம், கட்டிட நிபுணர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஐஏஎஸ்., ஐபிஎஸ்., பயணிகள் விமானிகள் மற்றும் போர் விமானிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆட்டோ, கார் மற்றும் மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் என பெண்கள் பெரும்பாலான துறைகளில் கால்பதித்து விட்டார்கள். பெண்கள் தடம் பதிக்காத - சாதிக்காத துறையே இல்லை எனக் கூறும் அளவிற்கு மகளிர் முன்னேற்றம் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதே முற்றிலும் உண்மை.
பெண்களை பலவீனமானவர்கள் என பலரும் தவறாகக் கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் போல வலிமையானவர்கள் யாரும் இல்லை. அவர்களிடம் கவர்ச்சியான சக்திகள் இல்லாவிட்டாலும், அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால்தான். மேலும் உலகில் பல்வேறு நாடுகள் இருந்தாலும்கூட அவையெல்லாம் 'தாய்நாடு' என்றுதான் அழைக்கப்படுகிறது. ஏனெனில், ஆண் - பெண் சிசுவை கருவறையில் சுமப்பவள் பெண்தான். அதற்கு ஆணின் பங்களிப்பு இருந்தாலும். மனித இனத்தின் உருவாக்கம் மகப்பேறிலிருந்துதான் தொடங்குகிறது. அவற்றை நன்குணர்ந்து, உலக மகளிர் தினமான இந்நன்னாளில் மகளிரின் மகத்துவத்தை மறவாமல் போற்றுவோம்.
எழுத்தாக்கம்: இரா. அமர்வண்ணன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ