மார்கழி 4 ஆம் நாள்: ஆழி மழைக்கண்ணனை போற்றுவோம்..!!
மார்கழி மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. சைவமும் வைணவமும் ஒன்றாக போற்றும் மாதம் மார்கழி மாதம்.
இந்து மதத்தில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. சைவமும் வைணவமும் ஒன்றாக போற்றும் மாதம் மார்கழி மாதம். இந்த புனிதமான மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை வழிபடும் கலாசாரம் பாரம்பரியமாகத் தொடர்கிறது.
திருப்பாவை 4-வது பாடல்:-
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக" இதுதான் இப்பாடலின் விளக்கமாகும்.
ALSO READ | 2021 மார்கழி மாதம் இரண்டாம் நாள்! ஆயர்பாடியும் தில்லை சிற்றம்பலமும்!!
திருவெம்பாவை 4-வது பாடல்:
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.
ALSO READ | நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அடித்தது ஜாக்பாட்: புத-ஆதித்ய யோகத்தால் பம்பர் அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR