புதுடெல்லி: மகாராஷ்டிரத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவின்போது ஏராளமான பிரபலத் திரைப்பட நட்சத்திரங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் சாதாரண மக்களைப் போல வந்திருந்து இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற காட்சி ஆச்சரியத்தையும், வாக்காளர்களிடைய தங்களது கடமையை பொறுப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் கிங் ஷாருக் கான் மகாராஷ்டிரத்தின் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக, பாந்த்ரா மேற்கு தொகுதியிலிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். ஷாருக்குடன் அவரது மனைவி வந்திருந்து வாக்களித்தார். அப்போது அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் பலர் மகிழ்ச்சியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


ஒரு நடிகராக, அவரது கதாபாத்திரங்களின் மூலமாக மிஸ்டர் பெர்ஃபக்ட் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமீர்கான், ஜனநாயகத்தின் பெரும் கடமையை நிறைவேற்றினார். மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சாவடியில் அவர் வாக்களித்தார். அமிர்கானின் மனைவியும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிரண் ராவ் வாக்களிக்க வந்திருந்தார். மும்பையின் பாந்த்ராவில் உள்ள கிரண் ராவ் வாக்களித்த பின்னர் பெருமையுடன் மை விரலைக் காட்டினார்.


ஏக் தோ தீன் பாடல் மூலம் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களையும் கவர்ந்த பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது வாக்குச் சாவடி அமைந்துள்ள மும்பையின் ஜுஹூவை அடைந்தபோது, ​​அங்கு இருந்த மக்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த மாதுரி தீட்சித் இதுவரை தவறியதேயில்லை. 


திரைப்பட நடிகை தீபிகா படுகோனே தனது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் மெத்தனம் காட்டியதேயில்லை. மும்பையின் பாந்த்ரா வெஸ்டில் உள்ள வாக்குச் சாவடியில் தீபிகா படுகோனே வாக்களித்தார். அதேநேரத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அனில் கபூர் ஆகியோர் அந்தேரி வெஸ்டு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.


முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜுனுடன் பாந்த்ரா வெஸ்டில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர்,  டெண்டுல்கர், அவரது மனைவி, மகன் ஆகியோரும் வாக்கு செலுத்தியதற்கு அடையாளமான மை வைக்கப்பட்ட விரலை காட்டினர். 


திரைப்பட நடிகரும் அரசியல் பிரபலமுமான ரித்தேஷ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் லாத்தூரில் வாக்களித்தார். மகாராஷ்டிராவின் மறைந்த முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ் தேஷ்முக், அவர் தனது நடிகை மனைவி ஜெனிலியாவுடன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தார்.


நடிகை பிரீத்தி ஜிந்தாவும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதில் தவறவில்லை. மும்பையில் உள்ள சாவடிக்கு வந்து வாக்களித்த பின், செய்தியாளர்களின் கேமராவுக்கு முன்னால் தனது மை விரலுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.


மும்பையின் பாந்த்ராவில் முன்னால் மிஸ் யுனிவர்ஸ் நடிகை லாரா தத்தா வாக்களித்தார். அவர் தனது கணவரும் டென்னிஸ் வீரருமான மகேஷ் பூபதியுடன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தார். வாக்களித்த பின்னர், இருவரும் செய்தியாளர்களின் கேமராவுக்கு முன்னால் தங்களது மை பூசிய விரலைக் காட்டினர்.


பிரபல பாடகர் கைலாஷ் கேர் மும்பையில் தனது உரிமையைப் பயன்படுத்தினார். அவர் ஜூஹுவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர், கைலாஷ் கெர் மக்களுக்கும் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.


நகைச்சுவைக்கு பெயர் பெற்ற மூத்த நடிகர் கோவிந்தா தனது வாக்களிக்கும் உரிமையை மிகுந்த தீவிரத்துடன் பயன்படுத்தினார். அவர் தனது மனைவியுடன் மும்பையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.


ஒரு சிறந்த குடிமகனின் கடமையைச் செய்யும் வகையில் நடிகை பத்மினி கோலாபுரி அதிகாலையிலேயே மும்பையிலுள்ள வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார். மக்களோடு ஒருவராக அவர் வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து தனது முறை வந்தபோது வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அவர் கிளம்பும்போது ​​வாக்குச் சாவடி ஊழியர்கள் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அவரும் மகிழ்ச்சியாக அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.


போஜ்புரி திரையுலக சூப்பர் ஸ்டாரும், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யுமான ரவி கிஷன், மும்பையின் கோரேகானில் வாக்களித்தார். 


நடிகர் டினோ மோரியாவும் மும்பையில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தினார். வாக்களித்தபின்னர் சாவடியை விட்டு வெளியே வந்த அவர் பெருமையுடன் வாக்களித்த அடையாளத்தைக் காட்டினார். கவிஞரும் பாடலாசிரியருமான குல்சர் மும்பையில் வாக்களித்தார்.


வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், சாமானியராக இருந்தாலும், பிரபலமாக இருந்தாலும், எல்லோரும் இந்த ஜனநாயக விழாவில் பங்கேற்க வேண்டும். இந்த மேன்மையான செய்தியை மக்களிடையே பரப்பும் வகையில் பாலிவுட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் இன்றைக்கு வரிசையில் காத்திருந்து பொறுப்பாக வாக்களித்தது சிறப்பாக அமைந்திருந்தது.