பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு (Pandu) இன்று அதிகாலை காலமானார் . அவருக்கு வயது 74 ஆகும். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா (Coronavirus) பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ALSO READ | கட்டளை மையம் திறக்க வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சின்னத் தம்பி’, 'திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த் கரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR