Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதறி அழுதுக் கொண்டே பேசிய திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றியும் குறிப்பிட்டார்
ட்ரான்ஸ் மாடலும், நடிகையுமான நமீதா, பிக்பாஸ் ஐந்தாம் சீசனில் கலந்துக் கொண்டிருக்கும் ஒரு திருநங்கை போட்டியாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
தன்னை போன்ற திருநங்கைகளை இயல்பாக யாரும் பார்ப்பதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னுடைய சமூகத்தினர் குறித்து எடுத்துரைப்பதற்காகவும் தான் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, போட்டியாளர்கள், தங்கள் வாழ்க்கையின் சம்பவங்களைப் பற்றி பேசும் டாஸ்கும் உண்டு. நேற்று அந்த டாஸ்கில் பேசிய போது நமீதா கதறியழுதார். அதைப் பார்த்த மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி உட்பட பலரும் நமீதா அழுதபடியே தனது கதையை சொல்லிக் கொண்டிருந்தபோது வந்து ஆசுவாசப்படுத்தி விட்டுச் சென்றார்கள்.
யாருக்காவது ஏதேனும் குறை இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை சொல்லி வளர்த்த தனது அம்மாவால், தனது பாலின மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுதான் மிகப்பெரிய சோகம் என்று நமீதா சொன்னார்.
Also Read | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு
தன்னை குடும்பத்தினர் அடித்ததில் உடல் மரத்துப் போய்விட்டது என்பதை சொல்லும்போது கதறிவிட்டார். திருநங்கைகள் என்றால் பிச்சை ஈடுபவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் தான் பலர் பார்க்கிறார்கள். இதற்கு முழு காரணம் பெற்றோர் தான். மூன்றாம் பாலினத்தவரை பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என சொல்லும் நீங்கள் தான் மாறவேண்டும் என்று சொன்னார்.
தனது தந்தையால் ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரச்சனையை புரிந்துக் கொள்ள முடிந்தது என்றும், அவர் தனக்காக உதவிகள் செய்ததையும் குறிப்பிட்ட நமீதா, ஆனால் அவர் தன் மீதான கவலையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லும்போது உடைந்துபோய் அழுதார்.
தான் தனது சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான் இங்கு வந்ததாக சொன்ன நமீதா மாரிமுத்து, அழாமல் உறுதியாக பேசவேண்டும் என்று உறுதியுடன் இருந்ததாகவும், ஆனால் பேசும்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொல்லி உடைந்துப் போய் கதறிக் கதறி அழுதார்.
Also Read | குதூகலமாக இருக்கும் பிக்பாஸ் வீடு; புதிய ப்ரோமோ
அழுதுக் கொண்டே தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொன்ன திருநங்கை நமீதா, திருநங்கைகளுக்கான நல வாரியம் அமைக்கும் முடிவை எடுத்த அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை பாராட்டினார்.
முதலமைச்சர் அமைத்த திருநங்கைகள் நல வாரியம் மூலம், வாக்கு அளிக்கும் உரிமை தொடங்கி பல விஷயங்கள் எங்களுக்குக் கிடைத்தது, சமூகத்தில் மரியாதையும் கிடைத்தது என்று சொல்லி, கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
திருநங்கைகளுக்கு கலைஞர் செய்த நல்ல பணிகளுக்காக, அனைவரும் எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருப்போம் என்று சொன்ன நமீதா, இறுதியில் அழுதுக் கொண்டே பாடிய பாடல், அனைவரின் கண்களில் கண்ணீரை அல்ல, ரத்தத்தையே வரவைத்தது என்று சொல்லலாம்.
Also Read | Big Boss 5: பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட…
அதிலும், தான் பாலின மாற்று அறுவைச்சிகிச்சை செய்துக் கொண்ட கதையை அவர் சொல்லும்போது, ஒருமுறை அறுவைசிகிச்சை செய்தால் ரத்த சேதம் எவ்வளவு என்று சொல்லும்போது, போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்திருபார்கள் என்பதை மறுக்க முடியாது.
பிக்பாஸ் சீசன் ஐந்தில் திருநங்கை போட்டியாளரான நான் மகுடம் சூடுவேன் என்றும் அவர் பாடலிலேயே குறிபிட்டதும் கவனிக்கத்தக்கது. இது ஒரு சமூக மாற்றத்தையும், அங்கீகாரத்தையும் சமூகத்தில் அளிக்கும் என்பதால், இந்த சீசனில் ஒரு திருநங்கை வெற்றியாளராக இருக்கலாம் என்று பரவலாக கூறப்படுவதை, நமீதாவின் கண்ணீர் கதை உறுதி செய்யும் என்றே தோன்றுகிறது.
கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது பாலினத் தேர்வை தேர்ந்தெடுத்து மூன்றாம் பாலினத்தவாராக மாறினார் நமிதா மாரிமுத்து.
Also Read | பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR