மக்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி பயணம்
இன்று தூத்துக்குடி செல்லும் நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க ஆறுதல் கூறுகிறார்.
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக தொடர் போரட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது. இதனால் போலீசாரும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சூட்டு கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஏற்கனவே மு.க. ஸ்டாலின், கமல் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள். பலர் சமூக வலைத்தளம் மூலம் தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் பதிவு செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்ததைக் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தந்து ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு" எனக் கூறியிருந்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த், வீடியோவில் அவர் கூறியாதாவது, "ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணம் அரசின் அலட்சியம். உளவுத்துறை உட்பட மொத்த நிவாகத்தின் தோல்வியே. காவல்துறை வரம்பு மீறி, சட்டத்துக்கு புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் காலை 8 மணி அளவில் தூத்துக்குடி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.