ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர்ச்சியாக பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போராட்டம் தடையில்லாமல் நடைபெற்று வந்தது. நேற்று போராட்டத்தின் 100_வது நாள் என்பதால், எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் கலவரமாக மாறி, கலவரம் வன்முறையாக மாறியது. வன்முறை காரணமாக வாகனங்களுக்கு தீவைப்பதில் பரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடும் வரை பரவியது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகி உள்ளனர். 70-க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.
இச்சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள காயம் அடைந்தவர்களை சந்தித்து தலைவர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தூப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் அவர் கூறியது, "ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணம் அரசின் அலட்சியம். உளவுத்துறை உட்பட மொத்த நிவாகத்தின் தோல்வியே. காவல்துறை வரம்பு மீறி, சட்டத்துக்கு புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் கூறியுள்ளார்.