ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
Veeran Movie Review: ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வீரன் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, காரணம் தமிழில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் எதுவும் வெற்றியடைந்தது இல்லை. மேலும் இந்த படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் கதை போலவும் இருந்தது. வீரன் படத்தில் ஹிப் ஹாப் தமிழா தவிர ஆதிரா ராஜ், வினை, பத்ரி, முனிஷ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட், நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வீரனூர் என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது. குமரனுக்கு 15 வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மின்னல் அவர் மீது படுகிறது, பின்பு மருத்துவமனையில் சேர்த்தாலும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கின்றனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் கரண்ட் தயாரிப்பதற்காக மண்ணுக்கடியில் கம்பிகளை பதிக்கின்றனர், இந்த கம்பி வெடித்தால் அந்த ஊரே தரைமட்டம் ஆகிவிடும் என்பது குமரனுக்கு தெரிய வருகிறது. மின்னல் வெட்டியதால் குமரனுக்கு சில சக்திகளும் கிடைக்கிறது, இதனை வைத்து வீரனூர் கிராமத்தை குமரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே வீரன் படத்தின் கதை.
தமிழில் இதுவரை சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றியடைந்தது இல்லை என்ற வரலாற்றை வீரன் படம் மாற்ற உள்ளது. இயக்குனர் ஏஆர்கே சரவன் மிகவும் நேர்த்தியாக அதுவும் நம்ம ஊர் மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் ஒரு சூப்பர் ஹீரோ கதையை எடுத்துள்ளார். குமரன் என்ற கதாபாத்திரத்தில் தனது வழக்கமான வெகுளித்தனத்துடன் அதே நேரம் சூப்பர் ஹீரோ சக்திகள் உடன் ஹிப்பாப் ஆதி சிறப்பாகவே நடித்துள்ளார். வீரனாக அவர் உருமாறும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. ஹிப்ஹாப் ஆதிக்கு அடுத்தபடியாக நக்கலைட்ஸ் சசி செல்வராஜ் நன்றாக நடித்துள்ளார், படம் முழுதும் இருக்கும் படியான நல்ல ஒரு கதாபாத்திரம் அவருக்கு இந்த படத்தின் மூலம் அமைந்துள்ளது. கதாநாயகி ஆதிரா ராஜுக்கு தமிழில் இது முதல் படம் என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகவே செய்துள்ளார். முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பை வர வைக்கிறது. நக்கலைட் செல்லா வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வினையின் தம்பியாக நடித்துள்ள பத்ரி கோவிலில் நடக்கும் காட்சியில் அசத்தியுள்ளார், அந்த ஒரு காட்சிக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.
வில்லனாக நடித்துள்ள வினை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். வெறும் சூப்பர் ஹீரோ கதையை மட்டும் கையில் எடுக்காமல் அதனை நம்மூர் காவல் தெய்வங்களுடன் ஒப்பிட்டு அதனை வைத்து திரைக்கதை எழுதி அதில் வெற்றியும் அடைந்துள்ளார் இயக்குனர் சரவன். படத்தின் இன்டர்வெல், போலீஸ் ஸ்டேஷன் சீன், கிளைமாக்ஸ் என படத்தின் முக்கியமான கட்டங்களில் படம் நன்றாக உள்ளது. ஹிப் ஹாப் ஆதி தனது சக்தியை வைத்து செய்யும் சில காமெடி காட்சிகளும் ஒர்க்அவுட் ஆகியுள்ளது. படத்தில் பெரிதாக தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் இன்னும் ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் கம்மி பண்ணி இருக்கலாம். ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம். சூப்பர் ஹீரோ பவரை தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தியது பாராட்டுக்குரியது. இனி தமிழில் வரும் காலங்களில் அதிகமாக சூப்பர் ஹீரோ படங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வீரன் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு பக்காவான படம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ