நெஞ்சை உருக்கும் `அக்கா குருவி` - திரைப்பட விமர்சனம்
ஷூவைப் பரிசாகப் பெறுவதற்காக ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் சிறுவன் நினைத்ததை அடைய முடியாமல் தவிக்க, பின்னாளில் என்னவாக மாறுகிறான் என்பதே அக்கா குருவி படத்தின் கதை.
கொடைக்கானல் பகுதி பூம்பாறை மலைப்பகுதியில் மாஹின் என்ற 11 வயதுச் சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தங்கை டாவியா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் டாவியாவும், மதியம் மாஹினும் பள்ளிக்குச் சென்று படிக்கின்றனர். ஷிப்ட் முறையில் பள்ளிகள் இயங்குவதால் சிக்கல் இல்லாமல் இருவரும் பள்ளிக்குச் செல்ல முடிகிறது. ஆனால், ஒரே ஷூ இருப்பதால் அதை இருவரும் அணிய வேண்டிய ஏழ்மையான சூழல் நிலவுவதால் டாவியா ஷூவை அணிந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
அவர் வீடு திரும்பிய பின்னரே அதே ஷூவை அணிந்துகொண்டு மாஹின் பள்ளிக்குச் செல்கிறார். இதனால் மாஹின் தொடர்ந்து தாமதமாகப் பள்ளி செல்ல வேண்டிய சூழல் நேரிடுகிறது. இந்நிலையில் ஒரு போட்டி பள்ளியில் அறிவிக்கப்படுகிறது. அந்த ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஷூ பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஷூவைப் பரிசாக வெல்ல வேண்டும் என்று தயாராகிறார் மாஹின்.
மேலும் படிக்க | சூர்யா- பாலா இடையே மோதல்? கைவிடப்படுகிறதா படம்?! - உண்மை என்ன?
நினைத்தபடி போட்டி நாளும் வருகிறது. மாஹின் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓடுகிறார். ஆனால், அவர் நினைத்தது ஒன்றாக இருக்க, நடந்தது வேறாக இருக்கிறது. இந்தச் சூழலை மாஹின் எப்படி எடுத்துக்கொண்டார், அதன் விளைவுகள் என்ன, பின்னாளில் மாஹின் என்னவாக ஆகிறார் என்று விரிகிறது திரைக்கதை.
மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குநர் சாமி அக்கா குருவி படத்தை இயக்கியுள்ளார். முன்பின்னாக சிறுவர்களின் கனவுக்கு வண்ணம் சேர்த்தவர் சில காட்சிகளையும் புதிதாக இணைத்துள்ளார். அது ரசிகர்களிடம் நன்றாக எடுபடுகிறது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஷூ எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஷூவால் அண்ணன் தங்கை இடையே இருக்கும் பாசம் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் அடையும் வெற்றி குறித்தும் மிக இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும், கச்சிதமாகவும் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. இதனிடையே சம்பந்தமே இல்லாமல் ஒரு காதல் கிளைக் கதையைச் சேர்த்ததுதான் நெருடலாக உள்ளது.
மேலும் படிக்க | ஜெய் பீம் படத்துக்கு இரண்டு விருதுகள்
மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் போட்டி போட்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். தொடர்ந்து இவர்களுக்கு வெளிச்ச வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் என்று தாராளமாக நம்பலாம். கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மாவாகவும், செந்தில்குமார் அப்பாவாகவும் இயல்பு மீறாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
உப்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. கொடைக்கானல் மலைப் பிரதேசத்தின் அழகை, இயற்கை எழிலைக் கண்களுக்குள் கடத்துகிறார். மூன்று பாடல்களையும் இசைஞானி இளையராஜாவே எழுதி, இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் படத்துக்கு உயிரூட்டியுள்ளார். மணிகண்டன் சிவகுமாரின் செதுக்கல் சிறப்பு.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், அவர்களைத் தந்தை படிக்க வைக்கும் முயற்சி, தந்தை கஷ்டத்தைப் புரிந்துகொண்டு தந்தையிடம் எதுவும் கேட்டுத் தொல்லை கொடுக்காத பிள்ளைகள் எனப் படத்தை மிகவும் அழகாகக் கொண்டு சென்றுள்ளார்.
சினிமா என்றாலே காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், நகைச்சுவை என்று ஜானர் ரீதியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது. இச்சூழலில் இதுபோன்ற தரமான, அவசியமான படங்களுக்கு ஆதரவு அளிக்கலாம். உயிர், மிருகம் போன்ற படங்கள் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குநர் சாமி இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து இயக்கி சிறுவர் சினிமாக்களுக்கான ஜானருக்கு புத்துயிர் அளிக்கலாம்.
மொத்தத்தில் அக்கா குருவி அன்பை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்திய தரமான சினிமாவாக மிளிர்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR