அதுக்குள்ள இத்தனை கோடியா..! ரிலீஸான 2 நாட்களில் மாபெரும் வசூலை அள்ளிய ஜெயிலர்!
Jailer Box Office Collection Worldwide: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரிலீஸான மூன்றே நாட்களில் பல கோடிகளை வசூலாக வாரி குவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், ஜெயிலர். இந்த படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமாேக வரவேற்பினை பெற்றுள்ளது.
அக்மார்க் ரஜினி படம்:
‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. அண்ணாத்த, 2.0 போன்ற படங்கள் வசூலில் குறை வைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்க்காமல் போனது. ரஜினியின் கம்-பேக்கிற்காக கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது. குடும்ப கதைகளில் நடித்துக்காெண்டிருந்த ரஜினியை பிடித்து இழுத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம்தான் ஜெயிலர். படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றுள்ளது. ரஜினிக்கு ஏற்ற மாஸான காட்சிகள், புதிய பரிமானத்தில் அவருடைய காமெடி என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளதால் ஜெயிலர் “அக்மார்க் ரஜினிகாந்தின் படம்” என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஹிட் ஆக ‘இந்த’ 5 காரணங்கள் போதும்..!
வசூல் நிலவரம்:
ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான நேற்று 75 கோடியாக இருந்ததாக கூறப்படுகிறது. வேலை நாட்களான வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே ஜெயிலர் படம் மாபெரும் வசூலை பிடித்துள்ளது. இந்த நிலையில், இன்றும் நாளையும் பெரும்பாலான பகுதிகளில் விடுமுறை நாள். இதனால் ஜெயிலர் படம், இன்று நாள் முடிவதற்குள் 150 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசூல் 200 கோடியை எட்ட இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
மாநில வாரியான வசூல்:
ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வெற்றிநடை போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் நேற்று வரை 46 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா மற்றும் நிஸாம் ஆகிய பகுதிகளில் படம் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஜெயிலர் படம் 11 கோடி வரை கலெக்ட் செய்துள்ளது. கர்நாடகாவில் 15.97 கோடி ரூபாயும் இந்தியாவின் பிற பகுதிகளில் 5 கோடி ரூபாயும் ஜெயிலர் படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. வெளிநாடுகளில் மட்டும் படம் 70.04 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். மொத்தத்தில், நேற்றைய நிலவரப்படி படம் 165.1 கோடி ரூபாயை ஜெயிலர் படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் மக்கள் திரையரங்கிற்கு படையெடுக்க உள்ளதால், 200 கோடி ரூபாய் வசூலை ஜெயிலர் இன்று குவித்து விடும் என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிகசர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமியோ கதாப்பாத்திரங்கள்:
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தை தவிர அதில் நடித்திருந்த முன்னணி நடிகர்கள் அனைவருமே காமியோ கதாப்பாத்திரத்தில்தான் வந்துள்ளனர். தமன்னா படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலிற்கு நடனமாடிவிட்டு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்றுள்ளார். ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு இணையாக கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் காட்சிகள் பேசப்பட்டுள்ளது. மோகன்லாலின் நடிப்பிற்கும் விநாயகத்தின் வில்லத்தனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முழு நடிப்பையும் ஜெயிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ