கபாலி: ஒரு வாரத்தில் ரூ. 320 கோடிக்கும் அதிகமாக வசூல்- எஸ். தாணு
ரஜினியின் ‘கபாலி’ வெற்றிப்படம் என அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான்விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
தாணு அவர்கள் கூறியதாவது:- நான் சாதாரண ஆளாக இருந்தபோது ரஜினிசார் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார். அப்போதே நாங்கள் நண்பர்கள். நான் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர் எனக்கு ஒரு படம் நடித்து கொடுத்தார். தொடர்ந்து எங்கள் நட்பு வளர்ந்து கொண்டே இருந்தது. தேவைப்படும் போதெல்லாம் அவர் எனக்கு படம் நடித்து கொடுத்தார். நான் தயாரித்த படத்தில்தான் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் கொடுத்தேன். அதன்பிறகு அவரது வளர்ச்சியும் இமாலய வளர்ச்சியாக அமைந்தது. நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்.இந்த நிலையில் ‘கபாலி’ படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் போனில் பேசிய ரஜினிசார், “நான் ஒரு கதை கேட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. இந்த படத்தை எடுக்க இது சரியான நேரம்” என்று தெரிவித்தார். கதை சொன்ன இயக்குனர் ‘மெட்ராஸ்’மற்றும்‘அட்டக்கத்தி’ படத்தை எடுத்த பா.ரஞ்சித் என்று சொன்னார். கதையை கேளுங்கள் என்றார்.
ரஜினி சாருக்கு கதை பிடித்திருந்ததால் நான் கதை கேட்கவில்லை. உடனே படம் தயாரிக்க தயார் ஆனேன். ‘கபாலி’ படம் இப்போது மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. ரஜினி இந்த படத்தை பார்த்து விட்டு மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று பாராட்டினார்.
இந்த படத் தயாரிப்பில் பங்கேற்ற கூட்டணி வெற்றி கூட்டணி சமீபத்தில் ரஜினியுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்த சோ அவர்கள் அற்புதமான படம். இதில் ரஜினி ரஜினியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று வாழ்த்தினார். ரஞ்சித்தை வைத்து நான் மீண்டும் படம் தயாரிப்பேன்.
‘கபாலி’ படம் ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. இது இதுவரை இல்லாத சாதனை. உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ. 320 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அற்புதமான படம் என்று பாராட்டுகள் குவிகின்றன.
விரைவில் ரஜினி சாருடன் அனைவரையும் சந்திப்பேன் என்றார்.