அரசியலுக்கு வந்தபின் சினிமாவில் நடிக்க மாட்டேன்: கமல்!
கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனாலும், தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனாலும் தான் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஒரு நடிகனாக மக்களை மகிழ்வித்தேன் ஓர் அரசியல்வாதியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என நம்புகிறேன். மக்கள் எனை விரும்புவதாகவே எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அரசியலுக்கு இத்தனை நாட்களுக்குள் வருவேன் நான் எந்த கால நிர்ணயமும் செய்யவில்லை. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில் 100 நாட்களில் வருவீர்களா என்று எனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அப்படி வைத்துக்கொள்ளலாம் என்றே கூறினேன்.
அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.
எனக்கு, என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும்தான் என் நாடு தொடங்கும். டெல்லிக்கு, தமிழகப் பிரச்னைகள்குறித்து தெரியாது. இதனால்தான், தேசியக் கட்சிகளால் அங்கு ஜெயிக்க முடிவதில்லை.
ரஜினி ஆன்மிகவாதி. அதனால், பா.ஜ.க-வுக்கு அவர் நண்பராகலாம். ஆனால், நான் பகுத்தறிவுவாதி. எந்தக் கட்சிகளுடனும் நான் சேர மாட்டேன்.
ரஜினியுடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய அரசியல் நிலைப்பாடுகுறித்தும் நான் அவரிடம் கூறியுள்ளேன். நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அடுத்த ஆண்டில் புதுக்கட்சி தொடங்குவேன்.
ஊழலை ஒழிக்கவேண்டும் என்பது முதற்கட்டமே. தவறுகள் கண்ணில்படும்போது கண்டிக்கவேண்டும். அரசியல் சூழலில் உள்ள மாசு வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. ஊழலை நகர்த்தவில்லைன்றால் வேறு எந்த வேலையும் நடக்காது.
தவறுகளைத் திருத்திக்கொள்வது நல்ல தலைமையின் கடமை. அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். அரசியலில் நான் ஒரு உதயமூர்த்தியாகச் செயல்படுவேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிப்பது என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும். முழுநேரமாக அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று கூறினார்.