Movie Review: அந்த நாள் ஞாபகம்! கபில்தேவின் சாதனை! 83 திரைப்பட விமர்சனம்...
அந்த நாள் ஞாபகம்! கபில்தேவின் சாதனை! 83 திரைப்பட விமர்சனம்...
உலகளவில் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தவிர்க்க முடியாத ஆதிக்கம் செலுத்துகிறது. பிசிசிஐ அமைப்பிடம் இருக்கும் அதிகாரங்கள் சில சமயங்களில் ஐசிசி-யையே நடுங்கச் செய்யும். ஆனால் கிரிக்கெட்டின் மையப்புள்ளியாக இந்தியா மாறியது எப்போது? அதற்கு முன் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து எப்படி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது போன்றவைதான் 83 திரைப்படத்தின் கதை.
கிரிக்கெட்டர்களின் கனவாக கருதப்பட்டும் லார்ட்ஸ் மைதானத்திற்குள் கூட அனுமதி மறுக்கப்படும் இந்திய அணி, 1983ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வண்ணம் உலகக் கோப்பையை கைப்பற்றிய கதைதான் 83. கபில்தேவ் தலைமையிலான அணி வீரர்கள், அன்றைய ஜாம்பவான் மேற்கிந்திய தீவுகள் அணியையும், கிரிக்கெட் ஆசான் இங்கிலாந்தையும் வீழ்த்திய அசாத்திய கதையை கண்முன் நிறுத்துகிறது 83.
இந்தியாவில் கிரிக்கெட் பரவலாக பார்க்கப்பட்டாலும் உலகளவில் பிரபலம் இல்லாத அணியைக் கொண்டிருந்தது. சுனில் கவஸ்கர் போன்ற சில வீரர்கள் மட்டுமே சோபித்துக் கொண்டிருந்த காலம். புயலாக அணிக்கு வந்த கேப்டன் கபில்தேவ் கொஞ்சம் கொஞ்சமாக அணியை செதுக்கி நாம் உலகக் கோப்பையை வெல்லலாம் என்கிறார்.
பத்திரிகையாளர்கள், டிவி நெறியாளர்கள் மட்டுமல்லாமல் சொந்த அணிக்காரர்களே இதைக் கேட்டு சிரிக்கிறார்கள். உச்சகட்டமாக ஒரு பத்திரிகையாளர் இந்தியா உலகக் கோப்பையை ஜெயித்தால் நான் நியூஸ் பேப்பரை சாப்பிடுகிறேன் என்கிறார். ஆனா இதனையெல்லாம் செய்து காட்டிய கபில்தேவின் சாதனை தொகுப்பைதான் 83 படத்தில் விரிவாக பேசுகிறார்கள்.
Also Read | ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்த்ரா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!
வளவள காட்சிகள் இல்லை, இந்திய அணி இங்கிலாந்து புறப்படுவதில் படம் தொடங்குகிறது. இறுதிப் போட்டி முடிகையில் படமும் முடிகிறது. சில கிளாஸிக் ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோக்களில் இருப்பதை அப்படியே இன்றைய நாளுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது மனதை 83ஆம் ஆண்டுக்கே திருப்பி எடுத்து செல்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான யாஷ்பால் சிங்கின் அதிரடி ஆட்டம், ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் ஆடிய ருத்ர தாண்டவம், மால்கம் மார்ஷலின் மின்னல் வேக பந்தில் வெங்கஸ்கரின் தாடை உடைந்தது, இறுதிப் போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை கபில்தேவ் பல மீட்டர் ஓடிச் சென்று பிடித்தது என புல்லரிக்கும் காட்சிகள் படத்தில் உண்டு.
ரன்வீர் சிங் (Ranveer Singh Alias Kapil Dev) பார்க்க கபில் தேவ் போலவே இருக்கிறார். அது மட்டும் அல்ல, விவ் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாய்ட் என அனைத்து விளையாட்டு வீரர்களும் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார்கள். அதன் வெற்றியாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை பார்த்தாலே பயம் வருகிறது. இவர்களையா இந்திய அணி வென்றது என்ற ஆச்சரியத்தோடு ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரலாம். இடையிடையே தேசப்பக்தி காட்சிகளையும் புகுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் 1983 உலகக் கோப்பை இந்தியாவின் சரித்திரம். அதனை அழகாக காட்சிப் படுத்தி மனதில் திரும்ப ஓட விட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். தவிர்க்க விடக்கூடாத திரைப்படம் 83.
READ ALSO | ரிவியூவர் இட்டிஷ் பிரஷாந்தை கிழித்து தொங்கவிட்ட 'முருங்கைக்காய் சிப்ஸ்' இயக்குனர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR