`ராக்கெட்டில் போனாரா சிவகார்த்திகேயன்?`: நடிகரின் அசுர வளர்ச்சியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
பத்தே ஆண்டுகளில் ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட முடியுமா என திரையுலகம் வாய்பிளந்து பார்க்கையில், சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை தொட ராக்கெட்டில் பயணம் செய்தார் என ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெப்போடிசம் என்னும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் பாணி இருந்து வருகிறது. திரையுலகை சாராத ஒருவர் அதில் பயணம் செய்து வெற்றி காண்பது என்பது மிக மிக அரிதான விஷயமாக மாறி போயிருக்கிறது. இதனால்தான் திரையுலக பின்னணி இல்லாமல் உச்சத்தை தொட்டிருக்கும் நடிகர் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, நெப்போடிசம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்தவர்கள் கூட பல நேரங்களில் ஓரம் கட்டப்படுகிறார்கள். பிரபல நடிகர் கார்த்தி ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில், “நாங்கள் எங்கள் அப்பாவின் உதவி கொண்டு திரையுலகிற்குள் வந்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இந்த துறையில் நிலைத்து நிற்க அந்த ஒரு தகுதி மட்டுமே போதாது. திறமயும் வேண்டும்” என பேசினார். அவர் சொன்னது போலவே நெப்போடிசம் மூலம் உள்ளே நுழைந்த பலர் கூட எதிர்நீச்சல் போட முடியாததால் காலப்போக்கில் சினிமா உலகம் வெளியே தள்ளிவிட்டிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று தவிர்க்க முடியாத ஆளுமையாக நிலை கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முதல் படமான மெரினா வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். மெரினா படப்பெட்டிக்கு பூஜை செய்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டிருந்த போட்டோ இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதில் வெற்றிபெற்று 'அது இது எது’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகி காலப்போக்கில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக மாறினார். அவருடைய காமெடி பேச்சும், கிண்டல் கலந்த உடல் மொழியும் மக்களை ரசிக்க வைத்தது.
5 ஆண்டுகால சின்னத்திரை பயணத்துக்கு பின் ’மெரினா’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கால் வைத்தார் சிவகார்த்திகேயன். மெரினா வெற்றிப்படமானலும் ‘3’ திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார். அதேநேரம் விஜய் தொலைக்காட்சியிலும் விடாமல் தொகுப்பாளராக நீடித்து வந்தார். ஒருமுறை விஜய் டிவியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் (Actor Vijay), "நீதான் நடிகராயிட்டியே அண்ணா. இன்னும் இங்க என்னண்ணா பண்ணிட்டு இருக்க என்றார்”. அது முதல் சிவகார்த்தியேனின் வாழ்க்கைப் பயணம் மாறத் தொடங்கியது.
ALSO READ | புதிய அவதாரத்தில் தோனி: 'அந்த பார்வையால்' திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், என அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகையே அதிர வைத்தார் சிவகார்த்திகேயன். காலப்போக்கில் ரெமோ, வேலைக்காரன் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக மாறினார். குழந்தைகளை கவரும் சிவகார்த்திகேயனின் பாங்கு எல்லோரையும் ரசிக்க வைத்து அவரையும் முன்னேற்றியது.
நடிகராக மட்டுமல்லாமல் 'கனா’ படத்தின் (Kanaa Movie) மூலம் தயாரிப்பாளர் அவதாரம், 'வருத்தப்படாத வாலிபர்’ சங்கம் படத்தில் பாடகர் அவதாரம், 'கோலமாவு கோகிலா’ படத்தில் பாடலாசிரியர் அவதாரம் என பல்துறை வித்தகராகி தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது அர்ப்பணிப்பை பாராட்டி தமிழக அரசு இவருக்கு 'கலைமாமணி’ விருது அளித்து பெருமைப் படுத்தியிருக்கிறது.
பத்தே ஆண்டுகளில் ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட முடியுமா என திரையுலகம் வாய்பிளந்து பார்க்கையில், சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை தொட ராக்கெட்டில் பயணம் செய்தார் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
ALSO READ | என் போட்டோ அருவருப்பா?! வெப்சைட்டை கடித்து குதறிய மாளவிகா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR