நயன்தாரா.... கடந்த சுமார் 15 ஆண்டுகளாக தமிழ் சினிமா தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர் இது. தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் கோலோச்சியுள்ள நயன்தாரா, அடுத்ததாக பாலிவுட் அவதாரமும் எடுக்கவுள்ளார். 70க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டம், அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை என புகழின் உச்சத்தில் இருக்கிறார் நயன்தாரா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டயானா மரியம் குரியனாகப் பிறந்த நயன்தாரா, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பகுதி நேரமாக மாடலிங்கும் செய்துவந்தார். அதன் மூலம் மலையாள சினிமாவில் முதலில் அறிமுகம் ஆன நயன்தாரா அதன் பின்னர் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் - 2005ஆம் ஆண்டு  வெளிவந்த ஐயா. இதில் பெற்ற கவனத்தால் அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது நயன்தாராவுக்கு. 



அதன் பின்னர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட, கிட்டத்தட்ட அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் கதாநாயகியாக நடித்துவிட்டார் நயன்தாரா. இதோ ரஜினிக்குக் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்திலும்கூட அவர்தான் கதாநாயகி. 2005இல் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அவர், இத்தனை ஆண்டுகள் கடந்தும் ரஜினிக்குக் கடந்த ஆண்டு வெளியான ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்றால் இதை வைத்தே சினிமாவில் நயன்தாராவின் ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும்.


ஆனால் நயன்தாரா இன்று அடைந்துள்ள இந்த இடம், அவருக்கு அவ்வளவு எளிதில் வாய்த்துவிடவில்லை. இதற்காக அவர் இழந்ததும், சந்தித்த விமர்சனங்களும் கணக்கில் அடங்காதவை. ஆம், வண்ணமயமான நயன்தாராவின் இந்தப் பயணத்தில் சில இருண்ட பக்கங்களும் உண்டு. ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைந்துவிட்டாலும் அதன்பிறகு நயன்தாராவுக்குப் பெரிதாக படங்கள் அமையவில்லை. அதன் பிறகு அவ்வப்போது கம்பேக் கொடுத்து கம்பேக் கொடுத்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளார் நயன்தாரா.



அதேபோல ஆரம்ப காலத்தில் அவரது பர்சனல் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வல்லவன் படக் காலகட்டத்தின்போது நடிகர் சிம்புவுடன் நயன்தாராவுக்குப் பழக்கம் ஏற்பட, இருவரும் காதலிக்கிறார்கள் எனவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் எனவும் பேச்சுகள் அடிபட்டன. ஆனால் திடீரென அந்த உறவு முறிந்துபோனது. அதேபோல, அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், வில்லு பட சமயத்தில் பிரபுதேவாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.


கிட்டத்தட்ட திருமண ஏற்பாடு வரைக்கும்கூட இருவரும் சென்றுவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அந்த உறவும் நீடிக்கவில்லை. சிம்புவுடன் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான புகைப்படம், பிரபுதேவாவின் பெயரை உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் என  சினிமா வட்டாரத்தில் தலைப்புச் செய்தியாய் மாறினார் நயன்தாரா. இவையெல்லாம் போதாது என சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் ஒன்றும் பெருத்த சர்ச்சைக்குள்ளானது.



தெலுங்கில் வெளிவந்த ராமராஜ்யம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நயன்தாரா. ஆனால் அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சீதையாக இவர் நடிக்கலாமா என நயன்தாராவின் சொந்த வாழ்க்கையை மையப்படுத்தி விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. பல தடைகளுக்குப் பின் இறுதியாக அதில் நடித்தார் நயன்தாரா. இப்படியாக நயன்தாராவைச் சுற்றி பல சிக்கல்கள்!


மேலும் படிக்க | எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்!


 


பொதுவாகவே சினிமா ஆண்மயச் சிந்தனைகளுடனும் ஆணாதிக்க மனோபாவத்துடனும்தான் இயங்கிவருகிறது. இப்படியான சினிமா உலகில் ஒரு பெண் சர்வைவல் ஆவதே சவாலான காரியம்தான். இப்படியான சூழலில் இதுபோன்ற அடுத்தடுத்த இரு உறவு முறிவுகள், அதையொற்றி எழுந்த கடுமையான விமர்சனங்கள், கிண்டல்கள், கேலிகள் உள்ளிட்டவை வேறு எந்த நடிகைக்கேனும் நிகழ்ந்திருந்தால் அதிலிருந்து இதுபோல மீண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படியே மீண்டிருந்தாலும்கூட அவர்கள், நயன்தாராவைப்போல தயாரிப்பாளர்களே தேடிவரக்கூடிய ஒருவராக, டாப் நடிகர்களின் தேர்வுக்குரியவராக, ஹீரோவே இல்லாமல் கதாநாயகியாக நடிக்கக்கூடியவராக, சொந்தமாக பட நிறுவனம் தொடங்கக்கூடியவராக, தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறக்கூடிய ஒரு நடிகையாக என தங்களது திரைப்பயணத்தை வெற்றிகரமாக அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றிருப்பார்களா என்பதும் பெருத்த கேள்விக்குறிதான்.


ஒவ்வொரு பிரிவின்போதும் அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதமும், சினிமாவில் தொடர்ச்சியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள சாதுர்யமும் நயன்தாராவிடம் கவனிக்கவேண்டியவை. அதேபோல எந்த சிம்புவிடம் அவருக்கு உறவு முறிவு எனக் கூறப்பட்டதோ அதே சிம்புவுடன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து படம் நடிக்கவும் முன்வந்த நயன்தாராவின் பக்குவமும், முதிர்ச்சியும்கூட கவனிக்கப்படவேண்டியவை.


மேலும் படிக்க | கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?



 


நயன்தாராவின் படங்கள் ஒருவருக்குப் பிடிக்காமல் போகலாம்; நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருவருக்குப் பெரிய பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இன்றைய பரபரப்பான உலகில், காதல் என்று மட்டுமல்ல பல்வேறு விஷயங்களில் சின்னச் சின்னத் தோல்விகளுக்குக்கூட உடனே துவண்டுபோகும் பெண்களும், ஏன் ஆண்களுமேகூட, தன்னம்பிக்கை- விடா முயற்சி- பொறுமை- வீண் விமர்சனங்களைப் புறந்தள்ளுதல்- எந்த விஷயத்தையும் பக்குவமாகக் கையாளுதல் என நயன்தாராவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு!


மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்! - இயக்குநர் நெல்சன் நீக்கமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR