“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!
Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகை ஸ்வேதா பேசும்போது, “ராஜா கிளி படம் என்னுடைய கனவு ப்ராஜெக்ட் என்று தான் சொல்ல வேண்டும். தம்பி ராமையா சார் என்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இல்லை. அவர் என் மீது வைத்த நம்பிக்கையை ஓரளவு காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கியதற்காக சுரேஷ் காமாட்சி சாருக்கு நன்றி” என்று கூறினார்.
மேலும் படிக்க | ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
இயக்குநர் உமாபதி ராமையா பேசும்போது, “இந்த படத்திற்கு இயக்குநராக நான் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லலாம். சுரேஷ் காமாட்சி சாரை பொருத்தவரை திறமையானவர்களை சரியாக தேர்ந்தெடுப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற ஆரம்பித்த சமயத்தில் தான் சுரேஷ் காமாட்சி சார் என்னை அழைத்து தன்னம்பிக்கை அளித்து இயக்குநராக ஆக்கினார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே எனது தன்ஹை தனித்தனியாக ஒரு பாடி லாங்குவேஜை உருவாக்கி கொடுத்து விட்டார். அதனால் எனக்கு படப்பிடிப்பில் எளிதாக இருந்தது. கிட்டத்தட்ட 80 சதவீதம் அவர் பண்ணிவிட்டார். ஆனால் திரைக்கதையில் அப்பா, சுரேஷ் காமாட்சி இருவரும் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது ரொம்ப வித்தியாசமான ஒரு பிணைப்பு. என் அப்பா அவரை தம்பி என்று அழைப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திருமணம் முதற்கொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியை படமாக்கிய போது மீண்டும் ஒரு டேக் எடுக்க கேட்கலாமா என தயங்கினேன். ஆனால் சமுத்திரக்கனி அண்ணன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரையும் தயார்படுத்தி அதை காட்சியை அற்புதமாக நடித்துக் கொடுத்தார். மற்ற நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பை அழகாக ஏற்படுத்திக் கொடுப்பார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே ஒரு புது இயக்குநராக எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அப்பாவை வித்தியாசமான மனிதராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீரோ எனும் போது அவரை வைத்து கொஞ்சம் ஏதாவது புதுசாக செய்ய ஆசைப்படுவது இயல்பு தானே. சின்ன முள்ளு பாடலில் என் தந்தைக்கு ஒஸ்தியில். சிம்பு ஆடிய நடன அசைவுகளை தான் முயற்சி செய்தோம். ஆனால் அவர் புதிதாக ஒன்று செய்தார். காலை விரித்து நடனம் ஆடுவதற்காக தரையில் எண்ணெய் எல்லாம் ஊற்றி அவரை ஆட வைத்தோம். அடுத்து அவரே எங்கே எண்ணெய் கொண்டு வாருங்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார். நல்ல படம் கொடுத்து இருக்கிறோம். இதயத்தில் இருந்து எடுத்துச் செல்வது போல ஒரு நல்ல கருத்தையும் இதில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.
கதையின் நாயகன் தம்பி ராமையா பேசும்போது, “எனது மகன் அறிமுகமாக இயக்குநராக அறிமுகமாகும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எம்ஜிஆர் ஆகவும் ஆர்எம் வீரப்பனாகவும் என எல்லாமாக வந்திருக்கும் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. நான் சந்தித்த பல தொழிலதிபர்களிடம் உரையாடிய போது மனிதரில் புனிதராக இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆத்மா அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்த ரகசியத்தை ஒரு பச்சை குழந்தை போல என்னிடம் கொட்டி தீர்த்தார். அதை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டுமே என நினைத்தபோது அதற்கு எனக்கு உருவம் கொடுத்தது என்றால் சமுத்திரக்கனி தான். சினிமாவில் பல பேர் என்னை பயன்படுத்துவார்கள்.. பயணம் செய்வார்கள்.. ஆனால் சமுத்திரக்கனி மட்டும்தான் என்னை பயன்படுத்தி பயணம் செய்து பக்கத்திலும் இருப்பவர். என் வீட்டில் யாராவது ஏதாவது என்னை சொன்னால் கூட என் தம்பி சமுத்திரக்கனி இருக்கிறான்.. அவனிடம் சென்று விடுவேன் என்று கூறி தான் அனைவரையும் மிரட்டி வருகிறேன்.
நான் குணச்சித்திர நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வினோதய சித்தம் என்கிற படத்தை எனக்காகவே உருவாக்கி, போகிற, வருகிற இடங்களில் எல்லாம் என்னை கொண்டாட வைத்தார். அவர் என்னை வைத்து வினோதய சித்தம் என்கிற படத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ராஜா கிளியை என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எல்லா நேரத்திலும் பசிக்கு அடுத்தவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? நமக்கு தேவையான போது நாமும் சமைக்க வேண்டும் தானே ? அப்படி தான் இந்த கதையை சமைத்தேன்.
உயரத்தில் இருக்கும் பல பேர் இன்று துயரத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கதை எதையும் உணர்த்தாது. உணர வைக்க செய்யும். படத்தின் கதையை உருவாக்கியபோது நான் தான் இதை இயக்குவேன் என சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் நானே நடித்துக் கொண்டு இயக்குநராக இருப்பது சரி வருமா என நினைத்து உமாபதியை இந்த படத்தை இயக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத்து நீ தான் படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குநராக கொண்டு வந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தது காலம் எங்களுக்கு கொடுத்த கொடை. புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவிற்கு பிறகு ஆறேழு மொழிகளில் பேசக்கூடிய வல்லமை கொண்டவர் அவர். சீதா பயணம் என்கிற பிரமாண்ட படைப்பை தனது மகளுக்காக அர்ஜுன் சார் எடுத்திருக்கிறார். இந்த ராஜா கிளி திரைப்படம் ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. இப்போது வெளியே வந்து பறக்க இருக்கிறது.. சத்யஜோதி தியாகராஜன் சார் சொன்னது போல, அது தங்க கிளியாக வெளிவர பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எனக்கும் அரவிந்தசாமிக்கும் என்ன பெரிய வயது வித்தியாசம் ? ஆனால் அவருக்கு தந்தையாக நடிக்கும் தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. அதேபோல இந்த படத்தில் என்னுடன் நடித்த கதாநாயகிகளும் அது போன்ற தன்னம்பிக்கையுடன் தான் நடித்தார்கள்” என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது, “இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்.. நான் கூட இதுவரை நடிக்கிறாத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா சார் நடித்து இருப்பதாக சொன்னார்கள். இது சரியில்லை சார். இங்கு இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்ட அவர்களது அனுபவங்களே எனக்கு ஒரு படம் பார்ப்பது போல இருந்தது. நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள்.. எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லையே. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
மேலும் படிக்க | ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ