சிங்கப்பூரில் வேலை, கை நிறைய சம்பளம்: ஏமாற்றிய நபர், பணத்தை பறிகொடுத்த அப்பாவிகள்
வெளிநாட்டு பணிகளுக்காக விண்ணப்பிகும்போது அதிகபட்ச எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில், அதிக சம்பளத்தை விடுங்கள், நம்மிடம் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடலாம்.
வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை.... இப்படி வெளிநாட்டு வேலையின் கனவோடு காத்திருக்கும் ஏராளமானோர் நம் நாட்டில் உள்ளனர்.
உள்ளூரில் போதுமான சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது, வெளிநாட்டுக்கு சென்று அதிக சம்பளத்தில் வேலை செய்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலிலும், மேன்மையான வாழ்க்கையின் கனவோடும் பலர் வெளிநாட்டுக்கு பணிகளுக்காக காத்திருப்பது உண்டு.
எனினும், வெளிநாட்டு பணிகளுக்காக விண்ணப்பிகும்போது அதிகபட்ச எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில், அதிக சம்பளத்தை விடுங்கள், நம்மிடம் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடலாம்.
அப்படிப்பட்ட சம்பவம் சமீபத்தில் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது. கடைக்கு வாடிக்கையாளராக வந்த நபர் வெளிநாட்டு வேலைக்கான மோகம் காட்டி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை முக்கிய தெருவில் குணசேகரன் என்றவர் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் புதுச்சேரி சாரதாம்பாள் பகுதியை சேர்ந்தவர். அவரது கடைக்கு முல்லை நாதன் என்ற 49 வயது நபர் அடிக்கடி ஜெராக்ஸ் எடுக்க வருவதுண்டு.
குணசேகரின் கடைக்கு முல்லை நாதன் அடிக்கடி வரும்போது அவர்கள் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது தன்னால் எளிதாக சிங்கப்பூரில் வேலை வாங்கித் தர முடியும் என்பதையும் முல்லை நாதன் குணசேகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிவதாக கூறியுள்ள முல்லை நாதன், அவர் மூலம் பலருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்த சிங்கப்பூர் நண்பர் தற்போது சென்னையில்தான் இருப்பதாகவும் குணசேகரனுக்கு ஆசை காட்டியுள்ளார் முல்லை நாதன்.
முல்லை நாதனின் ஆசை வார்த்தைகளை கேட்ட குணசேகரன் அவரிடம் முழுமையாக ஏமாறிப்போனார். தான் ஏமாந்தது மட்டுமல்லாமல், தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். சாதிக்கின் மகனுக்கு முல்லை நாதன் மூலம் சிங்கப்பூரில் வேலை வாங்கித்தர முடியும் என நம்பிய குணசேகரன், சாதிக்கிடமிருந்து வேலைக்காக இரண்டரை லட்சம் பணம் வாங்கி முல்லை நாதனிடம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பணத்தை பெற்றுக்கொண்ட முல்லை நாதன், மூன்று மாதங்களில் சிங்கப்பூர் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் சாதிக்கிடம் கூறியுள்ளார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்காமல் போகவே, சாதிக்கும் குணசேகரனும் முல்லை நாதனிடம் இது குறித்து கேட்டுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து, முல்லை நாதன் மற்றொரு பொய்யை எடுத்து வீசியுள்ளார். சிங்கப்பூருக்கு தனி ஆளாக வேலைக்கு அனுப்ப முடியாது, குழுவாகத்தான் அனுப்ப முடியும் என்பதால் அதிக நேரம் ஆகிறது என அவர் கூறியுள்ளார்.
இதையும் உண்மை என்று குணசேகரன் நம்பியதே பரிதாபம்!! குழுவாக செல்ல ஆள் பிடிக்க, இன்னும் ஒன்பது பேரிடமிருந்து ரூ.14 லட்சம் பணத்தை வாங்கி முல்லை நாதனிடம் குணசேகரன் அளித்துள்ளார்.
குழுவாக செல்ல பலரிடமிருந்து பணத்தை வாங்கி அளித்த பின்னரும், முல்லை நாதன் எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யாமல் இருந்ததால், குணசேகரன் அவரை பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளார். இதில் அவரைப் பற்றி சந்தேகத்திற்கு இடமான தகவல்கள் கிடைக்கவே அவரிடமே நேரடியாக சென்று விசாரித்துள்ளார்.
இதற்கிடையில் பணம் கொடுத்தவர்கள் குணசேகரனிடம் பணத்தை திருப்பிக்கேட்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி அவர் வட்டிக்கு கடன் வாங்கி பணத்தை திருப்பிக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து முல்லை நாதன் பற்றி குணசேகரன் சிபிசிஐடி-யில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை என்ற போர்வையில் பல மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என அரசாங்கமும் காவல் துறையும் அவ்வப்போது பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தாலும், இப்படி இந்த மோசடிக்காரர்களிடம் இன்னும் பலர் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தையும் இழக்கும் சோகம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போதுமான விழிப்புணர்வும், பகுத்தாய்வு செய்யும் தன்மையும் மக்களுக்கு இடையில் அதிகரிக்காவிட்டால், இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையை காட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.
மேலும் படடிக்க | அபுதாபி விமான நிலையம்: பயணர்கள் வருகையில் ஏற்றம், முதலிடத்தில் இந்தியர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR