7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ
சமீபத்தில், இந்திய மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அகவிலைப்படி விகிதம் டிசம்பர் 2024 வரை அமலில் இருக்கும். ஜனவரி 2025 முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வரும்.
அகவிலைப்படி 50% -ஐத் தாண்டியுள்ள நிலையில், பல தரப்பிலிருந்து ஒரு முக்கிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதற்கான விதி என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதில் இந்த கேள்வி வர ஒரு காரணம் உள்ளது. இதற்கு முன்னர், 2004 -இல் இதேபோன்ற சூழ்நிலை இருந்தது. அகவிலைப்படி 50% வரம்பை கடந்த பிறகு அரசாங்கம் அதை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தது.
இதன் காரணமாக, தற்போதும் அகவிலைப்படி 50% -ஐத் தாண்டி 53% -ஐ எட்டியுள்ளதால், அகவிலைப்படியை மீண்டும் அடிப்படை ஊதியத்தில் அரசாங்கம் இணைக்கலாம் என்று மக்கள் எதிர்பார்க்க்கிறார்கள். இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு வழிவகுக்கும்.
ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வருவதோடு, அகவிலைப்படியின் அடிப்படையில் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவார்கள்.
இது தவிர, இந்த மாற்றம் ஊழியர்களின் கொடுப்பனவுகள், போனஸ், ஓய்வூதியம் மற்றும் பிற அலவன்சுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை அனைத்தும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதனால் ஊழியர்களின் மொத்த வருமானம் அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகச் சிந்தித்து, ஊழியர்களின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், அரசாங்கம் இதற்கான உறுதிப்பாட்டை இன்னும் அளிக்கவில்லை.
அன்றாடம் அதிகரிக்கும் விலைவாசி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது பணியாளரின் அடிப்படை சம்பளத்தின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இது ஆண்டுக்கு 2 முறை மாற்றப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100) – 115.76)/115.76] x 100 / மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏA% = [(AICPI இன் சராசரி (கடந்த 3 மாதங்களில் அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.