பள்ளி மாணவர்களே... மாதம் 1000 ரூபாய் வேண்டுமா... இந்த தேர்வை எழுதுங்கள் போதும்!
10ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு' (Tamil Nadu Chief Minister's Aptitude Test 2024-25) தேர்வுத்துறை மூலம் நடத்தப்படும்.
இந்த தேர்வை எழுதி தேர்ச்சி அடையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (TN Government School) இடஒதுக்கீட்டின்படி கல்வியாண்டு முழுவதும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அந்த வகையில், 2024-25 கல்வியாண்டுக்கான 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு' வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திறனாய்வு தேர்வில் (Aptitude Test) 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு விடைகளை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல் தாளாக கணித பாடம் 60 மதிப்பெண்களுக்கும், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடம் இரண்டாம் தாளாக 60 மதிப்பெண்களுக்கும் என தேர்வு நடைபெறும். வரும் ஜன. 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை முதல் தாள் தேர்வும், அடுத்து இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் என மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பயின்று வர வேண்டும். dge. tn.gov.in எனும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை வரும் நவ. 30ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாயையும் சேர்த்து தலைமையாசிரியரிடம் டிச.9ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.