`மிடில் கிளாஸ் மக்களுக்கு...` நெட்டிசன் வேண்டுகோள் - சீனுக்குள் வந்த நிர்மலா சீதாராமன் - என்ன சொன்னார்?
நெட்டிசன் ஒருவரின் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) பதில அளித்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
X தளத்தில் நிர்மலா சீதாராமன் இன்று காலை பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். நாளிதழ் ஒன்றில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் சீதாப்பிராட்டியின் வசனங்கள் வெளியாகியிருந்தது. அதனை புகைப்படம் எடுத்து, அந்த நாளிதழை குறிப்பிட்டு அதை பதிவு செய்ததற்கு நன்றி என நிர்மலா சீதாராமன் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் கீழ் துஷார் சர்மா என்ற பதிவர் நிர்மலா சீதாராமனுக்கு, கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். இன்று காலை 8.48 மணிக்கு துஷார் சர்மா பதிவிட்டதற்கு, காலை 9.15 மணியளவில் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருந்தார்.
துஷார் சர்மா அந்த பதிவில்,"நாட்டிற்கான உங்கள் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், மேலும் நீங்கள் எங்களின் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளீர்கள்" என பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த பதிவில் அந்த பதிவர்,"நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் வழங்க பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ள மகத்தான சவால்களை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இது ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,"உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் புரிதலுக்கும் நன்றி. உங்கள் அக்கறையை நான் பாராட்டுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மக்களுக்கு செவி சாய்க்கக் கூடிய அரசு ஆகும். மக்களின் குரல்களைக் கேட்கிறது மற்றும் கவனிக்கிறது. உங்கள் புரிதலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்களின் கருத்து மதிப்புமிக்கது" என பதிலளித்துள்ளார்.
வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அடுத்தாண்டு 2025 மத்திய பட்ஜெட்டில் நிச்சம் வரி செலுத்துபவர்கள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.