உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்க
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவரது சட்டமன்ற தொகுதியான கொளத்தூருக்கு இன்று (ஆக. 5) வருகை புரிந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் தென்மேற்கு பருவமழை அதிகம் பொழிந்துவரும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின்,"எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்றார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கருத்து வலுபெற்றுள்ளதே என செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்,"இது தொடர்பான கோரிக்கை வலுத்துள்ளது தானே தவிர அது பழுக்கவில்லை" என பதிலளித்தார்.
முன்னதாக, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் ஆக. 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், அது ஆக. 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரது அமெரிக்க பயணத்திற்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் பரவி வந்தது.
உதயநிதி ஸ்டாலினும் இதுகுறித்து திமுக இளைஞரணி கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அதில் தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த பதில் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போதைக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படாது என்பது ஓரளவு உறுதியாகியிருக்கிறது எனலாம்.