அற்புதங்கள் அடங்கிய அவகாடோ ஜூஸ்... அளவாக குடித்தாலே எக்கச்சக்க நன்மைகள்!
அவகாடோ ஜூஸ் அல்லது பட்டர் புரூட் ஜூஸ் என கடைகளில் கேட்டாலே பல இடங்களில் இது கிடைக்கும். இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் ஆரோக்கியமான வகையில் சாப்பிடும்போது அவை இன்னும் நன்மை பயக்கும் எனலாம்.
அவகாடோவின் உள்புறம் இருக்கும் கொட்டை போன்ற பகுதியை அகற்றிவிட்டு, நடுவில் இருக்கும் பழ பகுதியை மட்டும் தனியாக எடுத்து பால் உடன் மிக்ஸியில் போட்டு அடித்தும் கூட நீங்கள் வீட்டிலேயே இதன் ஜூஸை குடிக்கலாம். பழத்தை நன்றாக கழுவி அதன்பின் ஜூஸ் போட வேண்டும் என்பது முக்கியமாகும்.
கண்ணுக்கு நல்லது: அவகாடோ ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, கண்புரை மற்றும் தசை சிதைவு ஆகியவற்றின் ஆபத்துகள் குறையும். இருப்பினும் உங்களுக்கு கண் சார்ந்த பிரச்னைகள் இருப்பின் மருத்துவ ஆலோசனைகளை பெற தயங்காதீர்கள், மறக்காதீர்கள்.
உடல் எடை குறையும்: ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் எப்போதுமே உடல் எடை குறைப்பது சுலபம். அதில் அவகாடோ ஜூஸ் இடம்பெறுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. இதில் உள்ள ஃபைபர் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கொல்ஸ்ட்ராலை குறைக்கும்: கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க அவகாடோ ஜூஸ் உபயோகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஓலியிக் அமிலம் என்ற நல்ல கொழுப்பு இதில் இடம்பெற்றுள்ளதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள பைட்டோஸ்டெரால், உடல் கொலஸ்ட்ராலை உள்ளிழுக்கும் தன்மையை குறைக்கும். இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவு சார்ந்த புரிதலுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம்.
இதய நோயே அண்டாது: இதுவரை மேற்கொண்ட பல ஆய்வுகளின்படி, அவகாடோ ஜூஸை குடிப்பவர்களுக்கு இதயம் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவது குறைவு என தெரியவருகிறது. மிகுந்த கொழுப்பு உள்ள உணவுகளுக்கு பதில் இதனை நீங்கள் தயங்காமல் உட்கொள்ளலாம். இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்த அளவும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
நீரிழிவுக்கும் பயனாகும்: டைப்-2 நீரிழிவு பிரச்னைக்கு அவகாடோ தீர்வளிக்கிறது. இதை வெறுமையாக ஜூஸ் போட்டு குடிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றம் இருக்காது. மேலும், முன்பு பார்த்தது போல ஒரு உணவில் நல்ல கொழுப்பு இருக்கும்பட்சத்தில், கெட்ட கொழுப்பு எளிமையாக உடலில் கரையும். எனவே, டைப்-2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக இது இருக்கும். எதற்கும் மருத்துவ ஆலோசனை பெறுவதே நலம். (பொறுப்பு துறப்பு: இவை வீட்டு வைத்தியம் மற்றும் பொது தகவல் அடிப்படையிலானது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை).