IND vs ENG: இந்திய அணியில் நடக்கும் உள்ளே - வெளியே... எக்கச்சக்க மாற்றங்கள்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான (Ben Stokes) இங்கிலாந்து வென்ற நிலையில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடரை வென்றிருந்தாலும் கடைசி போட்டியையும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ரோஹித் சர்மா தலைமையிலான (Rohit Sharma) இந்தியா துடிக்கும். ஒவ்வொரு வெற்றியும் WTC தரவரிசையில் எதிரொலிக்கும். அந்த வகையில், 5ஆவது டெஸ்ட் மீதும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறுகிறது. மலை பிரதேசத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
5ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் (Team India) ஸ்குவாடில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், காயத்தால் அவதிப்பட்டு வந்த கே.எல். ராகுல் (KL Rahul) 5ஆவது போட்டியிலும் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் அணியில் உள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) மீண்டும் அணிக்குள் திரும்புகிறார். இதனால், சிராஜ் அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படும். சிராஜ் ஏற்கெனவே பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில், ஆகாஷ் தீப்பை தொடரவே இந்திய அணி விரும்பும். முகமது ஷமிக்கு பிப். 26ஆம் தேதி வலது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தர் ஸ்குவாடில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார். அவர் மார்ச் 2ஆம் தேதி மும்பையில் தொடங்கும் தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அந்த போட்டி முடிந்த பின்னர், தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் அவர் அணிக்கு அழைக்கப்படுவார்.
IND vs ENG 5th Test Squad: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.