சென்ற மாதம் எந்த நிறுவனத்தின் கார் அதிக விற்பனை...? பெரிய நிறுவனத்திற்கு சறுக்கல்
மாருதி சுஸுகி மட்டுமின்றி ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளன. ஆனால் உள்நாட்டு சந்தையில் டாடாவின் மொத்த விற்பனை குறைந்துள்ளது.
மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக அதிகாரி (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 3 லட்சத்து 60 ஆயிரத்து 897 யூனிட்டுகளாக இருந்தது. இது எந்த ஆண்டும் இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும். முன்னதாக 2022ஆம் ஆண்டில் செப்டம்பர், இந்தியாவில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 400 வாகனங்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டன" என்றார்.
மாருதி சுஸுகி: மாருதி சுஸுகி ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 82 வாகனங்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளது, இதன் மூலம் நிறுவனம் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. மாருதியின் மொத்த விற்பனை கடந்த மாதம் 14 சதவீதம் அதிகரித்து, ஆகஸ்ட் 2022இல் 1,65,173 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய்: ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் அதிகரித்து 71 ஆயிரத்து 435 யூனிட்டுகளாக இருந்தது, ஆகஸ்ட் 2022இல் அது 62 ஆயிரத்து 210 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 9 சதவீதம் அதிகரித்து 53 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது.
டாடா: டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்து 45 ஆயிரத்து 513 யூனிட்களாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் 47 ஆயிரத்து 166 யூனிட்களாக இருந்தது. இதில் மின்சார வாகனங்களின் விற்பனை புள்ளிவிவரங்களும் அடங்கும்.
மஹிந்திரா & மஹிந்திரா: மஹிந்திராவின் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 19 சதவீதம் அதிகரித்து 70 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையில், இந்நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, 25 சதவீதம் அதிகரித்து, 37 ஆயிரத்து 270 ஆக உள்ளது.
டொயோட்டா: டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கடந்த மாதம் 22 ஆயிரத்து 910 யூனிட்களுடன் அதன் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 53 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் 20 ஆயிரத்து 970 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.