தேர்தலிலும் கால் பதிக்கும் முகமது ஷமி... பாஜக சார்பில் போட்டியா? - முழு விவரம்!
மக்களவை தேர்தல் தேதி மற்றும் அட்டவணை இன்னும் சில நாள்களில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளன.
மத்தியில் ஆளும் பாஜகவும் தேர்தல் பணியில் வேகம் காட்டி வரும் சூழலில், முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், பிரபலங்களை தேர்தலில் நிற்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது என கூறப்படும் சூழலில், இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமியிடமும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டுள்ளது.
இருப்பினும், தற்போது வரை அதற்கு முகமது ஷமி தனது முடிவை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவரை மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஷமி ரஞ்சி டிராபியில் வங்காள அணிக்காக விளையாடுபவர்.
முகமது ஷமி போட்டியிடும்போது இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. முகமது ஷமி ஒருவேளை, தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டால் அவரை மேற்கு வங்கத்தின் பாசிர்ஹத் மக்களவை தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாசிர்ஹத் தொகுதியில்தான் சமீபத்தில் வன்முறை ஏற்பட்டு பெரும் பிரச்னையான சந்தேஷ்காலி கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் ஆளும் திரிணாமுலுக்கு எதிராக பாஜக வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்த நிலையில், அதில் முகமது ஷமியும் பரிசீலனையில் உள்ளார்.
முகமது ஷமி கடந்தாண்டு உலகக் கோப்பை தொடருக்கு போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை. சமீபத்தில் கால் பாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஓய்வில் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரிலேயே பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் முகமது ஷமி இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 24 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.