IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?

Wed, 18 Sep 2024-6:10 pm,

இந்தியா - வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 

 

இந்த டெஸ்ட் போட்டிக்கான சீசன் டிக்கெட்டுகள் கடந்த வாரமே Paytm Insider தளத்தில் விற்பனை செய்யப்பட்டன. ரூ. 1,000 தொடங்கி ரூ. 15,000 வரை பல்வேறு விலை வரிசையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டால் 5 நாள்களும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், ஒருநாளுக்கு ஒருமுறைதான் நுழைய முடியும். வெளியே வந்துவிட்டால் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டீர்கள். 

 

இதை தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு நாளுக்குமான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, நீங்கள் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தின் டிக்கெட் கவுண்டரில் கொடுக்கும் டிக்கெட்டுகளை வாங்கி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். ரூ.200 முதல் ரூ.1000 வரை இதற்கும் டிக்கெட்டுகள் இருக்கின்றன. 

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் (Chennai Chepauk M.A. Chidambaram Stadium) இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (செப். 19) முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கான பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம். 

 

 

 

இந்தியாவின் பிளேயிங் லெவன் (கணிப்பு): ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யாஷ் தயாள், ஜஸ்பிரித் பும்ரா

 

வங்கதேசத்தின் பிளேயிங் லெவன் (கணிப்பு): நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

 

நாளை (செப். 19) முதல் செப். 23ஆம் தேதிவரை நடைபெறும் இந்த போட்டி தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கும். முதல் செஷன் காலை 9.30 மணிமுதல் நண்பகல் 11.30 மணிவரை இருக்கும். அதன்பின், நண்பகல் 11.30 - 12.10 மணிவரை உணவு இடைவேளை இருக்கும். அதன்பின் 12.10 முதல் 2.10 மணிவரை இரண்டாவது செஷன் இருக்கும். அதன்பின், மதியம் 2.10 மணிமுதல் - 2.30 மணிவரை தேநீர் இடைவேளை இருக்கும். கடைசி செஷன் மாலை 2.30 மணிமுதல் 4.30 மணிவரை இருக்கும். 

 

இந்த போட்டியை நீங்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும், மொபைலில் ஜியோ சினிமாஸ் செயலியிலும் நேரலையில் (IND vs BAN Live Telecast) காணலாம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link