பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று இரவு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் சில மத்திய அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்கின்றனர். 1952, 1957, 1962 ஆகிய காலகட்டங்களில் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக செயலாற்றிய நிலையில், அதன்பின் மூன்று முறை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்பது நரேந்திர மோடிதான்.
அந்த வகையில் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு பின்னர், பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.களுக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, தற்போது டெல்லியில் வெயில் கடுமையாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜூஸ்கள், மில் ஷேக்குகள், ஸ்டஃப்டு லிச்சி, மட்கா குல்பி, மேங்கோ க்ரீம், ரைத்த ஆகிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுகளை போல பாரம்பரியமான உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் மிகவும் பிரசித்த பெற்ற காய்கறிகளை கொண்டு ருசியாக செய்யப்படும் ஜோத்புரி சப்ஸி (Jodhpuri Sabzi), பருப்பு, மசாலா மற்றும் நறுமண மூலிகை பொருள்களால் செய்யப்பட்ட தம் பிரியாணி ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் ஐந்து விதமான ரொட்டி சார்ந்த உணவுகளும் பிரதான உணவு வகைகளில் இடம்பெற இருக்கிறது. மேலும், நாட்டின் பல பிரதேசங்களின் உணவுகளும் அங்கு கிடைக்கும். குறிப்பாக, பஞ்சாபி உணவுகளுக்கு தனி பிரிவே இருக்கும் என கூறப்படுகிறது.
சிறுதானியம் விரும்பிகளுக்கும் இந்த விருந்தில் தனி கவனிப்பு இருக்கிறது. தினையால் செய்யப்படும் பஜ்ரா கிச்சடி அதில் முக்கியமான ஒன்று. உணவு கட்டுப்பாடு கொண்டவர்களும், ஆரோக்கிய உணவுகளை நாடுவோருக்கும் இது சிறந்த உணவாகும்.
அதேபோல், குடிபானங்கள் அங்கு வழங்கப்பட உள்ளது. அதில் 5 விதமான ஜூஸ்கள் மற்றும் மில்ஷேக்குகள் ஆகியவை விருந்தினர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், கெட்டித் தயிரினால் செய்யப்படும் மூன்று விதமான ரைத்தா கிடைக்கும்.
இனிப்பு பிரியர்களுக்கும் இந்த விருந்தில் ராஜா வரவேற்பு இருக்கிறது. இங்கு மொத்தம் 8 விதமான இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட இருக்கின்றன. பன்னீர், க்ரீமி பால், உள்ளிட்டவையால் செய்யப்படும் ராஜஸ்தானின் இனிப்பு வகையான ரசமலாய் ஆகியவையும் உள்ளது.