பிரபல பாடகிக்கு வந்த காது கேளா பிரச்சனை! ஹெட்ஃபோன்ஸால் வந்த வம்பா?
பாடகி அல்கா யாக்னிக், வெளியிட்டிருந்த பதிவில் தான் ஒரு நாள் விமானத்தில் இருந்து இறங்கி வந்த போது திடீரென காது கேளாமல் போனதாகவும் இதே போல அடுத்தடுத்து நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் தன்னால் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக கூறியிருக்கிறார்.
பிரபல இந்தி பாடகியான அல்கா யாக்னிக், தனது தனித்துவமான குரலுக்கு பெயர் போனவர். குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடியிருக்கும் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. 1100க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார்.
தமிழிலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ‘இது என்ன மாயம்’ பாடலை பாடியிருக்கிறார்.
அல்காவிற்கு வந்திருக்கும் பாதிப்பிற்கு பெயர், Sensorineural Hearing Loss எனும் பிரச்சனையாகும். இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்ச்னை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க மருத்துவ ஆய்வில், இதனால் பாதிக்கப்பட்டவருக்கு திடீரென காது கேளாமல் போகும் என்றும், இதன் பிறகு 72 மணி நேரத்தில் அந்த காது கேளாத தன்மை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது, பெரும்பாலும் ஒரு காதை பாதிக்கும் என்றும், எந்த வயதை சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க நபர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்களாம்.
இது, ஒரு வைரஸ் வகை பாதிப்பு என்றும், உடலுக்குள் செல்லும் இந்த வைரஸ், நேரடியாக காது கேட்பதற்கு உதவும் மூளைக்கு செல்லும் நரம்பை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிக சத்தத்துடன் ஹெட்ஃபோன்ஸில் பாடல் கேட்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அல்கா யாக்னிக்கும், யாரும் அதிகமாக வால்யூம் வைத்து ஹெட்ஃபோன்ஸில் எதையும் கேட்க வேண்டாம் என்று தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.